சோசியல் மீடியா புதுசு! ஆனா ஐடியா அரதப்பழசு! – மு.க.ஸ்டாலின் கண்டனம்!

Webdunia
திங்கள், 20 ஜூலை 2020 (12:48 IST)
கந்த சஷ்டி கவசம் சர்ச்சை விவகாரம் போன்றவற்றில் திமுகவை சம்பந்தப்படுத்தி இந்து விரோதியாக சித்தரிக்க சிலர் முயல்வதாக மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

கறுப்பர் கூட்டம் யூட்யூப் சேனல் கந்த சஷ்டி கவசம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் வீடியோ வெளியிட்டது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அதன் நிறுவனர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் கடும் விவாதத்திற்கு உள்ளான நிலையில் குறிப்பிட்ட யூட்யூப் சேனல் திமுக மற்றும் திகவின் ஆதரவில் இயங்கியதாக பலர் குற்றம் சாட்டினர். மேலும் குறிப்பிட்ட யூட்யூப் சேனலுக்கு ஆதரவாக மு.க.ஸ்டாலின் பதிவிட்டது போன்ற போலி ட்விட்டர் பதிவும் சமூக வலைதளங்களில் பரவியது. அது போலி கணக்கு என திமுக முதன்மை செயலாளர் ஆர்.எஸ்.பாரதி விளக்கமளித்துள்ளார்.

இந்நிலையில் இந்த சர்ச்சை குறித்து பேசியுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ”திமுக மத வெறுப்பை தூண்டும் கட்சி கிடையாது. பல மதங்களை சேர்ந்தவர்கள் திமுகவில் அடிப்படை உறுப்பினர் முதல் பல முக்கியமான பதவிகளில் உள்ளனர். திமுகவை இந்து விரோத கட்சியாக சித்தரிப்பதற்காக அரதப்பழசான சிந்தனைகளை தூசித்தட்டி புதிய சமூக தளங்களில் பதிவிடுகிறார்கள். மதரீதியான பிரச்சினைகள் பக்கம் மக்களை திசை திருப்பி ஒபிசி இடஒதுக்கீட்டை அழிக்க முயல்கிறார்கள்” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்