நடத்தையில் சந்தேகம் : மனைவியின் தலையை வெட்டி கோவிலில் வைத்த கணவன்

Webdunia
வெள்ளி, 9 செப்டம்பர் 2016 (14:10 IST)
குடிபோதையில் இருந்த ஒருவர், தனது மனைவியின் தலையை வெட்டி கொலை செய்த சம்பவம் நெல்லை மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



திருநெல்வேலியை அடுத்து உள்ள வெள்ளான்குளம் என்ற கிராமத்தில் வசிப்பவர் முத்துராஜ்(47). இவரின் மனைவி ஜமுனா (45). இவர்களுக்கு ஒரு மகனும், இரண்டு மகள்களும் உள்ளனர். முத்துராஜ் பஞ்சாயத்தில் துப்புரவு தொழிலாளியாக பணி புரிந்து வருகிறார்.

அவருக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. மேலும் அவரின் மனைவி ஜமுனாவின் நடத்தையில் சந்தேகப்பட்ட அவர், அடிக்கடி அவரிடம் சண்டை போட்டு வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று இரவு அதேபோல் அவர்கள் இருவருக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதன்பின் முத்துராஜ் தூங்க சென்றுவிட்டார். இன்று காலையில் எழுந்ததும் அவருக்கு மீண்டும் மனைவி மீது கோபம் ஏற்பட்டது. எனவே எழுந்த உடனேயே மது அருந்தியுள்ளார். அப்போது ஜமுனா சமையல் அறையில் இருந்துள்ளார். அவரின் மகள் ஆர்த்திகா வீட்டில் படித்துக் கொண்டிருந்தார்.

ஆர்த்திகாவை, சிறிது நேரம் வெளியே போகச் சொல்லியிருக்கிறார் முத்து ராஜ். அவர் வெளியே சென்றபின், வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து ஜமுனாவின் கழுத்து பகுதியில் வெட்டியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் ஜமுனா பலியானார். அதன் பின்பும் ஆத்திரம் தீராத முத்துராஜ், அவரின் தலையை துண்டாக வெட்டி கையில் எடுத்துக் கொண்டு வெளியே சென்றார். இதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் அலறியபடி ஓடினர்.

ஆனால், எந்த பதட்டமும் இல்லாமல் சாலையில் நடந்து சென்ற முத்துராஜ், ஜமுனாவின் தலையை ஊருக்கு வெளியே உள்ள கோவில் முன்பு வைத்துவிட்டு, காவல் நிலையத்தில் சரண் அடைந்தார்.

இந்த சம்பவம் அந்த கிராம மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்த கட்டுரையில்