இன்று கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் சென்னையில் நடைபெற்றது.
மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தேசிய கட்சிகள் தொடங்கி மாநில கட்சிகள் உள்பட பல கட்சிகளும் தேர்தலை எதிர்கொள்வது குறித்த தீவிர ஆலோசனையில் இறங்கியுள்ளன. முக்கியமாக இந்த தேர்தலில் கூட்டணி எப்படி அமையப்போகிறது என்பதில் தமிழக அரசியலை பொறுத்தவரை தொடர் பரபரப்பு நிலவி வருகிறது.
இந்நிலையில்தான் இன்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது கட்சியின் நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு கூட்டத்தை அவசரமாக கூட்டினார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மக்களவை தேர்தலை எதிர்கொள்வது, கூட்டணி குறித்த முக்கிய ஆலோசனைகள் நடத்தப்பட்டுள்ளது,
அதன்படி நாடாளுமன்ற தேர்தலில் மற்ற கட்சிகள் மக்கள் நீதி மய்யத்துடன் கூட்டணி வைக்க விரும்பினால் 2 நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. முதலாவது தமிழக வளர்ச்சி மற்றும் மக்கள் நலனில் எந்த சமரசமும் செய்யப்படாது. இரண்டாவதாக கமல்ஹாசனின் சிந்தனைகளோடும், கொள்கைகளோடும் ஒத்துப்போகும் கட்சிகளுடன் மட்டும் கூட்டணி என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் இந்த சந்திப்பில் “கூட்டணியை நான் பார்த்துக்கொள்கிறேன். தேர்தல் பணிகளை நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள்” என கமல்ஹாசன் அறிவுறுத்தியுள்ளார். பெரும்பாலும் மநீம கட்சியானது திமுகவுடன் கூட்டணி அமைக்கவே வாய்ப்புகள் அதிகம் என பேசப்பட்டு வரும் நிலையில் கூட்டணிக்கு வரும் கட்சிகளுக்கு நிபந்தனைகள் விதிக்கப்படுவது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.