வருமானவரி விவகாரத்தில் விஜய் தவறு செய்யவில்லை என்றால் ஏன் சம்மனை ஏற்று விளக்கம் அளிக்கவில்லை என பாஜக மாநில செயலாளர் கே.டி.ராகவன் கேள்வி எழுப்பியுள்ளார்.
பாஜகவின் குடியுரிமை விளக்க கூட்டம் சென்னை மாங்காட்டில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட பாஜக மாநில செயலாளர் குடியுரிமை சட்டம் குறித்த விளக்கங்களை மக்களுக்கு அளித்தார். பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம் அமீரின் பேச்சு பற்றி கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர் ”பாஜக கட்சி விஜய்யை கண்டு பயப்படுவதாக அமீர் கூறுகிறார். ஆனால் உண்மையில் அமீர் பாஜகவை கண்டு பயப்படுகிறார். அதனால்தான் இப்படி பேசுகிறார். வருமானவரித்துறை விவகாரத்தில் விஜய் மடியில் கனம் இல்லை என்றால், பயப்படாமல் வருமானவரித் துறையின் சம்மனை ஏற்று விசாரணைக்கு செல்ல வேண்டியதுதானே” என கேள்வி எழுப்பியுள்ளார்.
தொடர்ந்து பாஜகவினர் பலர் விஜய்க்கு எதிராக கருத்து தெரிவித்து வருவது அரசியல் வட்டாரத்தில் பல்வேறு யூகங்களை ஏற்படுத்தி வருகிறது.