ஒரு வருடமாக சம்பளம் இல்லை : கரூர் இ-சேவை ஊழியர்கள் போராட்டம்

Webdunia
புதன், 7 செப்டம்பர் 2016 (18:11 IST)
கரூர் மாவட்டத்தில் பொது இ–சேவை மையத்தில் பணியாற்றும் பணியாளர்களுக்கு ஒரு வருடமாக பணிபுரிந்த நிலையிலும் சம்பளம், அங்கிகார அட்டை, பி.எப் மற்றும் ஜாயின் லெட்டர் எதுவும் தராததினால் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட பணியாளர்களால் பரபரப்பு ஏற்பட்டது.


 

 
தமிழக அரசின் இ-சேவை மையம் மூலம் பட்டா மாறுதல், பெயர் மாற்றுதல், சிட்டா நகல், மின்சார கட்டணம், ஆதார் அட்டை உள்ளிட்ட தமிழக அரசின் சேவைகளை வழங்கி வந்தனர். 
 
இந்நிலையில் இந்த சேவை மையம் கரூர் மாவட்டத்தில் தமிழக அரசின் கேபிள் டி.வி மூலமாகவும், எல்காட் என்கின்ற ஒப்பந்த முறையில் பணியாளர்கள் பணியாற்றி வந்த நிலையில், எல்காட் என்கின்ற தனியார் ஒப்பந்ததாரர்கள் ஒப்பந்த முறையின் மூலம் கரூர் மாவட்டத்தில் 24 மையங்களில், 3 மையத்தினருக்கும் மட்டும் சம்பளம் பட்டுவாடா செய்யப்பட்டதாகவும், மற்ற 21 மையங்களில் பணியாற்றும் பணியாளர்களுக்கு ஒரு வருடமாக ஊதியம் வழங்காமல் வந்தனர். 
 
மேலும் இவர்கள் பணியாற்றுவதற்கான அங்கீகார அட்டை, ஜாயின் லெட்டர், பி.எப் உள்ளிட்ட எவ்வித சான்றுகளும் வழங்கவில்லை 
 
இந்நிலையில், பலமுறை நிர்வாகத்திடம் கோரிக்கையும் விடுத்துள்ளனர். ஆனால், இது குறித்து எந்த வித நடவடிக்கையும் எடுக்காத நிலையில் இன்று 21 மையங்களில் பணிபுரியும் பணியாளர்கள் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு, தங்களது எதிர்ப்பை காட்டினர். மேலும் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனுக்களையும் கொடுத்தனர்.

சி.ஆனந்தகுமார் - கரூர் மாவட்டம்
அடுத்த கட்டுரையில்