வெற்றிக்கான வேட்கையில் அசிங்கமான வார்த்தைகளை அரசியல் கட்சிகள் பயன்படுத்துவதாக கமல்ஹாசன் மறைமுகமாக விமர்சித்துள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான தேர்தல் பிரச்சாரம் நடந்து வரும் நிலையில் பிரச்சாரத்தில் அரசியல் தலைவர்கள் மோசமான வார்த்தைகளை பயன்படுத்தி எதிர்தரப்பினரை தாக்குவது சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. சமீபத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் கமல்ஹாசனை எதிர்த்து கோவை தெற்கில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் “லிப் ஹீரோ” என குறிப்பிட்டு பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து ட்விட்டரில் கண்டன பதிவிட்டுள்ள கமல்ஹாசன் “வெற்றிக்கான வேட்கையில் பண்பற்ற வார்த்தைகள் நாற்புறமும் நாராசமாய் ஒலிக்கின்றன. எதிர் தரப்பை எதிரி தரப்பென கருதுவது முதிர்ச்சியின்மை. யாகாவாராயினும் நாகாப்போம் சொல் இழுக்கற்று. தலைமுறை நம்மைக் கவனிக்கிறது.” என மறைமுகமாக கண்டனம் தெரிவிக்கும் வகையில் பதிவிட்டுள்ளார்.