சேலம் அருகே 716 சவரன் தங்க நகை கொள்ளை : தனியார் நிதி நிறுவனத்தில் துணிகரம்

Webdunia
செவ்வாய், 16 ஆகஸ்ட் 2016 (13:51 IST)
சேலம் மாவட்டம், ஆத்தூருக்கு அருகே உள்ள கெங்கவல்லி எனும் ஊரில், பூட்டிக் கிடந்த ஒரு தனியார் நிதிநிறுவனத்தில், 5 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்டுள்ள விவகாரம் அந்த பகுதி போலீசாருக்கும், பொது மக்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 

 
கெங்கவல்லியின் கடைவீதியில், கேரளாவைச் சேர்ந்த ஒரு பிரபல தனியார் நிதி நிறுவனம் ஒன்று செயல்படுகிறது. இங்கு, அந்த பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் தங்கள் நகைகளை அடமானம் வைத்துள்ளனர்.
 
கடந்த 2 நாட்களாக அங்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. இன்று காலை வழக்கம் போல் ஊழியர்கள் கடையை திறந்தனர். அப்போது, கடையின்  லாக்கரில் இருந்த நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மொத்தம் 5 கிலோ தங்க நகை, அதாவது ரூ.5 கோடி மதிப்புள்ள, 716 சவரன் நகைகள் கொள்ளை போனது தெரியவந்துள்ளது.
 
அந்த நிறுவனத்தின் பின்பக்கமாக உள்ள ஜன்னல் கம்பியை வளைத்து, கொள்ளையர்கள் உள்ளே புகுந்துள்ளது தெரிய வந்துள்ளது. இதில் ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால், இந்த நிறுவனத்திற்கு அருகில்தான் காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது. 
 
காவல் நிலையம் அருகிலேயே இந்த கொள்ளை நடைபெற்றிருப்பது, போலீசாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில்தான், சேலத்திலிருந்து சென்னைக்கு சென்ற ரயிலில், 5.75 கோடி மதிப்புள்ள பணம் கொள்ளையடிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. 
 
அந்த பரபரப்பு அடங்குவதற்குள், கெங்கவல்லியில் இந்த கொள்ளை சம்பவம் நடைபெற்றுள்ளது. அந்த நிறுவனத்தில் தங்கள் நகைகளை அடமானம் வைத்த, அந்த பகுதி விவசாயிகளும் மற்றும் பொதுமக்கள், ஏராளமானோர் அந்த நிறுவனம் முன்பு திரண்டனர். 
 
இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள். கொள்ளையர்களை பிடிக்க ஒரு தனிப்படையும் அமைக்கப்பட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்