எம்ஜிஆரை போல ஜெயலலிதாவை வெளிநாட்டுக்கு அழைத்து செல்ல கோரிக்கை!

Webdunia
திங்கள், 5 டிசம்பர் 2016 (15:02 IST)
முன்னாள் முதல்வர் எம்ஜிஆரை தனி விமானம் மூலம் வெளிநாட்டுக்கு அழைத்து சென்றது போல தற்போது முதல்வர் ஜெயலலிதாவையும் வெளிநாட்டுக்கு அழைத்து சென்று சிகிச்சை அளிக்க திராவிட கழக தலைவர் கி.வீரமணி கோரிக்கை விடுத்துள்ளார்.


 
 
உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு நேற்று மாலை மாரடைப்பு வந்தது. ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ள முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலை தொடர்ந்து மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக அப்பல்லோ அறிக்கை வெளியிட்டுள்ளது.
 
இந்நிலையில் முதல்வரின் உடல்நிலை குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள திக தலைவர் கி.வீரமணி, முதல்வரின் உடல்நிலையில் ஏற்பட்ட பின்னடைவு மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அளிப்பதாக உள்ளது.
 
தீவிர சிகிச்சைப் பிரிவில் நமது டாக்டர்கள் கண்காணித்து வருவது சற்று ஆறுதலானது என்றாலும் கூட, இவரது உடல்நிலையில் மேலும் முன்னேற்றம் ஏற்பட, இங்கிலாந்து அல்லது மற்ற வெளிநாடுகளுக்கு உடனடியாக அழைத்துச் செல்லும் வாய்ப்பு பற்றி, அருகிலிருந்து கவனிப்போர், துணிந்து முடிவு எடுப்பது பற்றி அவசரமாக ஆலோசித்து ஆவன மேற்கொள்ள வேண்டும்.
 
எம்.ஜி.ஆர் அவர்களை எப்படி மருத்துவ வசதி பெற்ற தனி விமானம் மூலம் அழைத்துச் சென்று, சிகிச்சை அளித்து குணப்படுத்தியதுபோல, முதல்வரையும் அழைத்துச் செல்ல  வாய்ப்பு பற்றி பரிசீலித்தல் அவசரம் அவசியம் என கூறியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்