ஈஷா காவேரி கூக்குரல் கருத்தரங்கு! ஜாதிக்காய் மதிப்புகூட்டல் தொழில்நுட்பங்களை விளக்குகிறார் IISR விஞ்ஞானி ஜெயஶ்ரீ!

Prasanth Karthick
வெள்ளி, 30 ஆகஸ்ட் 2024 (10:05 IST)

இந்திய நறுமண பொருட்கள் ஆராய்ச்சி நிறுவனம், விவசாயிகளை தொழில்முனைவோர்களாக மாற்ற அனைத்து முயற்சிகளும் மேற்கொள்கிறது. குறிப்பாக மரவாசனைப் பயிர்களில் இருந்து கிடைக்கும் ஜாதிக்காய், இலவங்கப்பட்டை, கிராம்பு போன்ற பொருட்களை ஆய்வு செய்து வருகிறது. இவற்றை எப்படி எல்லாம் மதிப்பு கூட்டலாம், அதற்கு தேவையான தொழில்நுட்பம், இயந்திரம் உள்ளிட்டவற்றை கண்டுபிடிப்பது என்ற அசாதாரணமான பணியை செய்து வருகிறது. இது குறித்து IISR (Indian Institute Of Spices Research)-இன் விஞ்ஞானியாக இருக்கும் முனைவர். இ. ஜெயஶ்ரீ அவர்கள் விளக்கமாக நம்மோடு உரையாடினார்.

 

 

முனைவர். இ. ஜெயஶ்ரீ அவர்கள் கோலிக்கோட்டில் அமைந்துள்ள IISR (Indian Institute Of Spices Research)-இல் கடந்த 22 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். குறிப்பாக ஜாதிக்காய், இலவங்கப்பட்டை போன்ற மரவாசனைப் பயிர்களை ஆய்வு செய்து வருகிறார். இவரிடம் ஜாதிக்காயில் என்ன மாதிரியான ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறீர்கள் என கேட்ட போது “ஆரம்பத்தில் ஜாதிக்காயின் மேல் பகுதியை விவசாய கழிவு என அப்புறப்படுத்தி விடுவோம். அதிலிருந்து எந்த உற்பத்தியும் செய்ய முடியாது என்ற நிலை இருந்தது. ஆனால் இப்போது பல ஆய்வுகள் மேற்கொண்ட பின்னர் அதை மதிப்புக் கூட்டி பல உபயோகமான பொருட்களை செய்து வருகிறோம். 

 

முக்கியமாக ஜாதிக்காய் பேஸ்ட், ஊறுகாய், ஸ்குவாஷ் (சர்பத்துக்கான சாறு), ஜாம், மிட்டாய்கள் போன்ற பல பயனுள்ள பொருட்கள் இன்று தயாரிக்கப்படுகின்றன. இது போன்ற பொருட்களை உருவாக்குவதற்கு தேவையான தொழில்நுட்ப இயந்திரத்தை நாம் உருவாக்கி இருக்கிறோம். இதை ஒரு சிறிய அளவில் செய்யாமல் தொழிற்சாலை அளவில் செய்யும் வகையில் இப்போது நம்மிடம் தொழில்நுட்பம் மிக நல்ல முறையில் இருக்கிறது.

 

இந்த தொழில்நுட்பத்தையும், இயந்திரங்களையும் கேரளாவில் சில பகுதிகளிலும் அதை சுற்றியும் ஓரளவு கொண்டு சேர்த்திருக்கிறோம். இதன் மூலம் ஆரம்ப நிலை தொழில் முனைவோர்கள் இந்த தொழில்நுட்பத்தை வாங்கி, எங்கள் இடத்திலேயே தேவையான் பிரசாசிங் (Processing) செய்து அவர்கள் பொருட்களை சந்தைப்படுத்தலாம். இந்த பயிரில் இருந்து விவசாயிகளுக்கு கூடுதல் வருமானத்தை உருவாக்கி தரும் வாய்ப்பை நாங்கள் தருகிறோம்.” என்று விளக்கமாக கூறினார். 

 

மிக சுவாரஸ்யமான இந்த ஆய்வு குறித்து மேலும் தெரிந்து கொள்ள விரும்பி உதாரணமாக ஜாதிக்காய் மிட்டாய் தயாரிக்க வேண்டும் என்றால் என்ன மாதிரியான செயல்முறைக்கு அதை உட்படுத்த வேண்டும் என்பதை சொல்ல முடியுமா என கேட்டோம். அதற்கு அவர் “ஜாதிக்காயின் மேல் பகுதியை பிரித்தெடுத்து அதை தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். இதிலிருந்து மிட்டாய் தயாரிப்பது என்பது 6 – 7 நாள் ஆகும் ஒரு செயல்முறை.  அதன் பின் அதை சர்க்கரை பாகில் ஊற வைக்க வேண்டும், பின்னர் ட்ரே ட்ரையர் (Tray Dryer) இயந்திரத்தில் வைத்தெடுப்பதற்கு ஏதுவாக ஜாதிக்காய்களை சரியான முறையில் தயார்ப்படுத்த  வேண்டும். பின்பு ட்ரையரில் உலர்த்தி மீண்டும் சர்க்கரை பாகில் ஊற வைத்து மிட்டாய்களை உற்பத்தி செய்ய வேண்டும். இவ்வாறு தயாரிக்கப்படும் மிட்டாய்களை 6 மாதம் வரை வைத்துக் கொள்ள முடியும். இது ஜாதிக்காயில் இருந்து கிடைக்க கூடிய மிக சுவையான மதிப்பு கூட்டல் பொருள், மேலும் இதற்கு சந்தையில் நல்ல வரவேற்பு உள்ளது” என்றார்.

 

முனைவர் ஜெயஶ்ரீ அவர்கள், இது போல் ஜாதிக்காயிலிருந்து பல பொருட்களை மதிப்பு கூட்டல் செய்வது எப்படி என்பதை நேரடியாக சொல்ல இருக்கிறார்.  மேலும் இவற்றை மதிப்புக் கூட்ட தேவையான தொழில்நுட்பங்கள் குறித்தும் நமக்கு மிக விரிவாக சொல்லித்தர இருக்கிறார். ஈஷா காவேரி கூக்குரல் சார்பில் “சமவெளியில் மரவாசனை பயிர்கள் சாத்தியமே” எனும் கருத்தரங்கம் வரும் செப்டம்பர் 1-ஆம் தேதி தாராபுரத்தில் நடைபெற உள்ளது. இதில் இவர் கலந்து கொண்டு ஜாதிக்காய் குறித்த தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்க இருக்கிறார். 

 

மேலும் , மரவாசனை பயிர்களை விளைவித்து வெற்றியாளர்களாக திகழும் பல முன்னோடி விவசாயிகள், வேளாண் வல்லுநர்கள், மற்றும் மத்திய ஆராய்ச்சி நிறுவனங்களை சேர்ந்த விஞ்ஞானிகள் என பல அறிஞர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டு பயனுள்ள பல்வேறு தகவல்களை பகிர உள்ளனர். 

 

இக்கருத்தரங்கில் கலந்து கொள்ள விரும்புவோர் 94425 90079 / 94425 90081 என்ற எண்ணை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்