ரூ. 19,592.58 கோடி பெற்று ஜி.எஸ்.டி வசூலில் இரண்டாவது இடம் பிடித்த தமிழகம்

Webdunia
செவ்வாய், 6 பிப்ரவரி 2018 (07:24 IST)
இந்தியாவில் சரக்கு மற்றும் சேவை வரி(GST) கட்டுவதில் தமிழகம் இராண்டாவது இடம் பிடித்திருப்பதாக தமிழக அரசின் வணிக வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மத்திய அரசு ஒரே நாடு ஒரே வரி என்பதை அடிப்படையாக கொண்டு கடந்த ஜூலை மாதம் ஜிஎஸ்டி திட்டத்தை அமல்படுத்தியது.  ஜிஎஸ்டி திட்டத்தை பலர் எதிர்த்து வந்தாலும் இது ஒரு சட்டமாக அமல்படுத்தப்பட்டுவிட்டதால் அனைவரும் ஜிஎஸ்டி வரியை செலுத்தி வருகின்றனர்.
 
இந்த ஜி.எஸ்.டி, வரியில் 50 சதவீதம் மத்திய அரசுக்கும், 50 சதவீதம் மாநில அரசுக்கும் பகிர்ந்துகொள்ளப்படுகிறது.  ஜி.எஸ்.டி. மூலம் கடந்த டிசம்பர் மாதம் வரையிலான 6 மாத காலத்தில் மத்திய அரசுக்கு ரூ.9.8 லட்சம் கோடி கிடைத்துள்ளது. ஜி.எஸ்.டி. அதிகம் வசூலான மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு 2-வது இடத்தை பிடித்திருக்கிறது.
 
தமிழகத்தில் கடந்த ஜூலை முதல் டிசம்பர் மாதம் வரையில் ஜி.எஸ்.டி. மூலம் ரூ.19 ஆயிரத்து 355.19 கோடி வசூலிக்கப்பட வேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால்  வசூல் ஆன தொகையோ ரூ. 19 ஆயிரத்து 592.58 கோடி. கூடுதலாக ரூ.237 கோடி வசூலாகி இருக்கிறது.
 
மத்திய அரசுக்கு ஜி.எஸ்.டி மூலம் அதிக வருவாயை ஏற்படுத்திய மாநிலங்களில் முதல் இடத்தில் மராட்டியமும் (16 சதவீதம்), இரண்டாவது இடத்தில் தமிழ்நாடும் (10 சதவீதம்),  மூன்றாவது இடத்தில் கர்நாடகமும் (9 சதவீதம்) இடம் பெற்றிருக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்