கடந்த 26 வருடங்களாக சிறையில் உள்ள தன்னை தண்டனை காலம் முடிந்தும் விடுதலை செய்யாமல் சிறையிலேயே என்னை வைத்துள்ளதால் தயவு செய்து என்னை கருணை கொலை செய்து விடுங்கள் என ராஜீவ் கொலை குற்றவாளிகளில் ஒருவரான ராபர்ட் பயஸ் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்து ராபர்ட் பயஸ் எழுதியுள்ள கடிதத்தில், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை சிறைவாசியாக இருந்து வருகிறேன். 11.06.2017 அன்றோடு 26 ஆண்டுகள் சிறைவாசம் நிறைவடைந்து 27-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறேன்.
இந்நிலையில் எங்களது விடுதலை குறித்து 2014-ஆம் ஆண்டு முன்னாள் தமிழக முதல்வர் அம்மாவின் முடிவு என்பது இங்குள்ள தமிழர்கள் மட்டுமின்றி, உலக ஒட்டுமொத்த தமிழர்களின் விருப்பத்தை வெளிப்படுத்துவதாக இருந்தது. தமிழகத்தில் மட்டுமின்றி, உலகெங்கிலும் வாழும் தமிழர்கள் எமது விடுதலையை ஆவலுடன் எதிர் நோக்க, அரசியல் தலைவர்கள் அனைவரும் எந்த பாகுபாடுமின்றி ஆதரவு தெரிவிக்க, நீதிமன்றங்களும் எம் விடுதலைக்கு பரிந்துரை செய்ய, இப்படி எல்லா நிலைபாடுகளும் எமக்கு ஆதரவாக உள்ள நிலையில் எந்த காரணத்தால் எங்களது விடுதலை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது எனத் தெரியவில்லை.
முன்பிருந்த மத்திய அரசும் தற்போதைய மத்திய அரசும் எமது விடுதலை குறித்து மாநில அரசின் முடிவை கடுமையாக எதிர்த்து வருகின்றன. ஆகவே சிறைக்குள்ளேயே எமது வாழ்க்கையை முடித்து விட வேண்டும் என மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஆம். அரசுகளின் இப்போதைய இந்த மௌனம் எமக்கு இதைத் தான் உறுதியாகச் சொல்கிறது.
இந்த நீண்ட சிறைவாசம் தனிப்பட்ட என்னை மட்டுமின்றி ஒட்டுமொத்த என் குடும்பத்தையும் தண்டனைக்குள்ளாக்கியது. எம்மைச் சிறைக்குள்ளேயே முடக்குவது தான் அரசுகளின் நோக்கம் என்பது தெள்ளத் தெளிவாகப் புரிகின்றது. மேலும் கடந்த பல ஆண்டுகளாக எனது குடும்பத்தாரோ, உறவுகளோ தமிழகம் வந்து என்னைச் சந்திக்காத நிலையில், வாழ்வில் பெறும் அர்த்தம் இருப்பதாக எனக்கு தெரியவில்லை.
1999-ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் எனக்கெதிரான வழக்கில் இறுதித் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளுள் ஒருவரான மாண்புமிகு நீதியரசர் வாத்வா அவர்கள் என்னை குற்றமற்றவர் என்று அறிவித்த பின்னரும் இந்த 26 ஆண்டுகள் சிறைவாழ்க்கை பெரும் வேதனையைத் தருகின்றது.
ஆகவே கடந்த 26 ஆண்டுகளில் இதுவரை தோன்றாத எண்ணம் ஆழமாக வேரூன்றியுள்ளது. இனி விடுதலை இல்லை இல்லை என்ற நிலையில், இனி உயிர் வாழ்வதில் பயனில்லை என்ற முடிவுக்கு வந்து விட்டேன். ஆகவே, தயவு செய்து என்னை “கருணைக் கொலை” செய்து எனது உடலை என் குடும்பத்தாரிடம் ஒப்படைக்குமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.