தான் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு பிறந்த மகன் எனவும், தனது தாயான ஜெ.வை, அவரின் தோழி சசிகலா அடித்துக் கொலை செய்து விட்டதாகவும் வாலிபர் கொடுத்த புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜெ. வின் மரணத்திற்கு பின் பல்வேறு பரபரப்பான சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. சில நாட்களுக்கு முன்பு, நான் எம்.ஜி.ஆருக்கும், ஜெயலலிதாவிற்கு பிறந்த மகள் என பிரியா மகாலட்சுமி என்ற பெண் பத்திரிக்கைகளுக்கு பேட்டியளித்தார். போலீசாரின் விசாரணையில் அவர் மோசடி பேர்வழி எனத் தெரிந்ததும், போலீசார் அவரை கைது செய்தனர்.
இந்நிலையில், தற்போது நான் ஜெ.விற்கும், சோமன்பாபுவிற்கும் பிறந்த குழந்தை என்று கிருஷ்ணமூர்த்தி என்ற வாலிபர் கூறியுள்ள விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோட்டை சேர்ந்த அவர், தமிழக அரசின் முதன்மை செயலாளர், டி.ஜி.பி, உள்துறை செயலாளர் ஆகிய மூவருக்கும் ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:
என் பெயர் கிருஷ்ணமூர்த்தி. வயது 31. நான் ஈரோடு மாவட்டத்தில் முத்துக்கவுண்டம் பாளையம், காஞ்சி கோவில் கிராமத்தில் வசிக்கிறேன். நான் நடிகர் சோமன்பாபுவிற்கும், ஜெயலலிதாவிற்கும் பிறந்த ஆண் குழந்தை. அவர்கள் இருவருக்கும் எழுந்த கருத்து வேறுபாடு காரணமாக, நான் சிறு வயதாக இருக்கும் போதே, என்னை ஈரோட்டை சேர்ந்த ஒரு தம்பதிக்கு தத்துக் கொடுத்து விட்டனர். அதற்கான ஆதாரங்களையும் இதில் இணைத்துள்ளேன்.
தற்போது நான் ஈரோட்டில் ஜெ.வின் தோழி வசந்தாமணி என்பவரின் வீட்டில் வசித்து வருகிறேன். கடந்த செப்டம்பர் மாதம் 14ம் தேதி முதல் 18ம் தேதி வரை நான் ஜெ.வின் போயஸ்கார்டன் வீட்டில் இருந்தேன். செப்.22ம் தேதி, எனது தாய் ஜெ.விற்கும் சசிகலாவிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, ஜெ.வை மாடிப்படிக்கட்டில் இருந்து சசிகலா கீழே தள்ளி கொலை செய்தார். இதில் பயந்து போன நான் இவ்வளவு நாட்களாக வெளியே வரவில்லை.
தற்போது எனது வளர்ப்பு பெற்றோருக்கு கொலை மிரட்டல் வருகிறது. அவர்களுக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும். சசிகலாவிற்கு தகுந்த தண்டனை அளிக்க வேண்டும்” என கிருஷ்ணமூர்த்தி குறிப்பிட்டுள்ளார்.