500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது, அவற்றை வங்கிகளில் செலுத்தி புதிய 500, 2000 நோட்டுகளாக மாற்றலாம என இந்திய பிரதமர் மோடி நேற்று இரவு அறிவித்தார். கருப்பு பணத்தை மீட்பதற்கும், கள்ள பணத்தை தடுக்கவும் அரசு எடுத்திருக்கும் அதிரடி நடவடிக்கை என கூறப்படுகிறது.
இந்த அறிவிப்பு வெளியான சில நிமிடங்களிலேயே நாடு முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மக்கள் குழம்பிவிட்டார்கள். கையில் இருக்கும் 500, 1000 நோட்டுகளை என்ன செய்வது, நாளைய தேவைக்கு வேறு பணம் இல்லையே குடும்பத்தின் தேவைகளை எப்படி சமாளிப்பது என விழிபிதுங்கி போனார்கள் மக்கள்.
இதனால் கையில் இருக்கும் பணத்தை வங்கி கணக்கில் போட நேற்று இரவு கூட்டம் அலை மோதியது. கையில் செலவுக்கு பணம் இல்லாததால் 100 ரூபாய் நோட்டுக்கு ஏடிஎம் செண்டர்களில் அலை மோதியது. 400 ரூபாய்க்கு மேல் எடுக்க முடியாத நிலையில் மக்கள் தவித்தனர்.
ஒரே நேரத்தில் சென்னையில் உள்ள அனைத்து ஏடிஎம்களிலும் கூட்டம் அலை மோதியது. இதனால் அனைத்து ஏடிஎம் சர்வர்களும் தினறியது. டவுன் ஆன சர்வரால் நீண்ட நேரம் கால் கடுக்க நின்ற மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஒவ்வொரு ஏடிஎம்களாக செயலிழக்க ஆரம்பித்தது. அதில் இருந்த 100 ரூபாய் நோட்டுகளும் தீர்ந்தது.
தலைநகர் சென்னையில் சாலைகள் வேறிச்சோடி கிடந்தன இரவு. எங்கு பார்த்தாலும் மக்கள் ஏடிஎம்களிலேயே குவிந்த கிடந்தனர். நீண்ட வரிசையில் நின்று அல்லல் பட்டனர். நேற்று இரவு பிரதமர் மோடி இந்த அறிவிப்பை வெளியிட்டதில் இருந்தே இரவு முழுவதும் பெரும் பதற்றமும் பரபரப்புமே நிலவியது.