சென்னையில் கனமழை எச்சரிக்கை: கட்டுப்பாட்டு மையத்தில் துணை முதல்வர் உதயநிதி ஆய்வு

Mahendran
செவ்வாய், 12 நவம்பர் 2024 (11:46 IST)
சென்னையில் கன மழை எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளதை அடுத்து, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கட்டுப்பாட்டு மையத்தில் ஆய்வு செய்தார்.
 
சென்னையில் நேற்று இரவு முதல் மிதமான மழை பெய்து வரும் நிலையில், அடுத்த ஆறு நாட்களுக்கு கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை தெரிவித்துள்ளது.
 
இந்த நிலையில், சென்னை மாநகராட்சி ஒருங்கிணைந்த அவசரகால கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார். பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறிய போது, சென்னையில் நேற்று இரவு மழை பெய்த போதிலும் மழை நீர் தேங்கவில்லை என்றும், கனமழை பெய்தாலும் அதை எதிர்கொள்ள அரசு தயாராக இருக்கிறது என்றும் தெரிவித்தார்.
 
மேலும், மழை நீரை அகற்ற சுமார் 1500 மோட்டார் பம்புகள், 150 நீர் உறிஞ்சும் இயந்திரங்கள் தயார் நிலையில் இருப்பதாகவும், கூடுதல் மோட்டார்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
 
கடந்த முறை மழை நேரத்தில் நியமனம் செய்யப்பட்ட அதிகாரிகளே இந்த முறையும் மண்டல அதிகாரிகளாக நியமனம் செய்யப்படுவார்கள் என்றும், மழையின் அளவை பொறுத்து கூடுதல் அதிகாரிகள் நியமனம் நடக்கும் என்று தெரிவித்தார்.
 
சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் கன மழை எதிர்பார்க்கப்படுவதால் மழை குறித்த புகார்களுக்கு உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும், மழைநீர் கால்வாய்களில் தூர்வாரும் பணியை விரைவில் முடிவடையும் என்றும் அவர் தெரிவித்தார்.
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்