கருணாநிதிக்கு தீவிர சிகிச்சை : உண்மை நிலவரம் என்ன?

Webdunia
வெள்ளி, 27 ஜூலை 2018 (12:41 IST)
திமுக தலைவர் கருணாநிதி உடல் நலக்கோளாறால் பாதிக்கப்பட்டிருப்பதால் அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 
வயது முதிர்வு மற்றும் உடல் நிலை காரணமாக திமுக தலைவர் கருணாநிதி கடந்த 2 வருடங்களாக ஓய்வில் இருப்பதால் தீவிர அரசியலில் இருந்து அவர் ஒதுங்கி இருக்கிறார். அவரது தொண்டையில் ட்ரக்கியாஸ்டமி கருவி பொருத்தப்பட்டிருப்பதால் பேச முடியாத நிலையில் அவர் இருக்கிறார். அவ்வப்போது, சென்னை காவேரி மருத்துவமனைக்கு மருத்துவ பரிசோதனைக்காக அவர் வந்து செல்கிறார்.  
 
கடந்த 18ம் தேதி காவேரி மருத்துவமனைக்கு வந்தார். ட்ரக்கியாஸ்டமி சிகிச்சையில் பழைய குழாய் அகற்றப்பட்டு 4வது முறையாக அவருக்கு புதிய குழாய் பொருத்தப்பட்டது. அந்நிலையில்தான், கடந்த சில நாட்களாக அவருக்கு காய்ச்சல் இருப்பதாக செய்திகள் வெளியானது.
 
திமுகவின் தலைவராக 1969ம் ஆண்டு ஜூலை 27ம் தேதி பொறுப்பேற்றார் கருணாநிதி. எனவே திமுக தலைவராக 50ம் ஆண்டில் அவர் இன்று அடியெடுத்து வைத்து தலைவர் பொறுப்பில் பொன்விழா காணுகிறார்.
 
இந்நிலையில்தான், அவரின் உடல் நிலையில் நேற்று இரவு நலிவு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து காவிரி மருத்துவமனையில் இருந்து 4 மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் கோபாலபுரம் இல்லம் சென்று அவருக்கு சிகிச்சை அளித்தனர். அவருக்கு காய்ச்சல் மற்றும் சீறுநீரக தொற்று ஏற்பட்டிருப்பதால் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அவரை சந்திக்க தொண்டர்கள் யாரும் வர வேண்டாம் எனவும் மருத்துவனை சார்பில் கேட்டுகொள்ளப்பட்டது.
 
சமீபத்தில் அவருக்கு அளித்த சிகிச்சையை அவரின் உடல் ஏற்றுக்கொள்ளவில்லை எனவும், அதனால் அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. அதோடு, சிறுநீரக தொற்றும் ஏற்பட்டுள்ளதால் மருத்துவர்கள் அவரை தீவிர கண்காணிப்பில் வைத்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
 
ஏற்கனவே 4 மருத்துவர்கள் இருந்த நிலையில், தற்போது மேலும் 2 மருத்துவர்கள் கோபாலபுரம் இல்லத்திற்கு சென்றுள்ளனர். அவர்கள் இருவரும் சிறுநீரக சிறப்பு மருத்துவர்கள் எனத் தெரிகிறது. மற்றவர்கள் அவரை சந்தித்தால் அவருக்கு மீண்டும் தொற்று ஏற்படும் என்பதால் அவரை சந்திக்க மருத்துவர்கள் யாரையும் அனுமதிக்கவில்லை.
 
கலைஞர் கருணாநிதி பூரண நலம் பெற்று மீண்டு வருவார் என திமுக தொண்டர்கள் காத்துக்கிடக்கின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்