காங்கிரஸும், திமுகவும் நீலி கண்ணீர் வடிக்கிறார்கள்! – எச்.ராஜா ஆவேசம்!

Webdunia
புதன், 18 டிசம்பர் 2019 (18:48 IST)
இந்திய குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தும் எதிர்க் கட்சிகளை கண்டித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் எச்.ராஜா.

மத்திய அரசு நிறைவேற்றிய குடியுரிமை சட்டத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகள் போராட்டங்களை நடத்தி வருகின்றன. நாடு முழுவதும் பல்வேறு மாணவ அமைப்புகளும் அரசுக்கு எதிராக போராடி வருவது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து திமுக சார்பில் அனைத்து கட்சி பேரணி நடத்த இருப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்த போராட்டங்கள் குறித்து பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் திமுக மற்றும் காங்கிரஸை தாக்கி பேசிய அவர் ”இந்தியா துண்டாடப்பட்டதற்கு காரணமே காங்கிரஸ்தான். இலங்கை தமிழர்கள் பலர் கொல்லப்பட்டதற்கு திமுகதான் காரணம். ஆனால் இன்று இலங்கை தமிழர்களுக்காக போராடுவதாய் நீலி கண்ணீர் வடிக்கிறார்கள்.” என்று கூறியுள்ளார்.

மேலும் குடியுரிமை சட்டம் குறித்து பேசியுள்ள அவர் ”குடியுரிமை சட்டம் மத சார்பில் அமைக்கப்பட்டது அல்ல. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட இஸ்லாமிய தேசங்களிலிருந்து பாதிக்கப்பட்டு வந்த 6 மதத்தினருக்கு குடியுரிமை வழங்க சட்டம் வழி செய்கிறது. அவை இஸ்லாமிய தேசங்கள் என்பதால் அதில் உள்ள இஸ்லாமியர்கள் பாதிக்கப்பட போவதில்லை என்பதால் அதில் பெயர் சேர்க்கப்படவில்லை” என விளக்கம் அளித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்