தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் ஆய்வு நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் அவரது அடுத்த விசிட் கன்னியாகுமரி மாவட்டத்தில் தான் என்கிறார்கள் அரசியல் வட்டாரத்தில்.
ஆளுநரின் இந்த ஆய்வு ஏற்கனவே டெல்லியில் இருந்து திட்டமிட்டு கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆளுநர் எங்கெல்லாம் ஆய்வு நடத்த வேண்டும் என்பது முன்கூட்டியே டெல்லியில் இருந்து ப்ளான் போட்டுக் கொடுத்துவிட்டார்களாம்.
அந்த லிஸ்டில் பிஜேபிக்குச் செல்வாக்கான மாவட்டமாக கருதப்படும் கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களில்தான் முதலில் இருக்கிறதாம். இந்த மாவட்டங்களில் முதலில் கவனம் செலுத்த வேண்டும் என்று ஆளுநருக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கிறதாம்.
ஆளுநருக்கு டெல்லி கொடுத்த அசைன்மெண்ட்படி கோவை ஆய்வுக்கு பின்னர் அவரது அடுத்த விசிட் கன்னியாகுமரி மாவட்டத்தில்தான் இருக்கும் என உறுதியாக சொல்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக இருந்தாலும் அதிகாரங்களை ஆளுநரிடம் கொடுத்து ஆட்டிவைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.