பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து.. அலறியடித்து இறங்கிய பயணிகள்..!

Siva
செவ்வாய், 1 அக்டோபர் 2024 (07:30 IST)
பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீரென ஏற்பட்ட தீவிபத்துக்கு பிறகு, அந்த ரயிலில் இருந்த பயணிகள் அலறி அடித்துக் கொண்டு இறங்கியதாக அதிர்ச்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்று காரைக்குடியில் இருந்து சென்னை நோக்கி நேற்று புறப்பட்ட பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்து குறித்து தகவல் அறிந்த பயணிகள், ரயில் நின்றவுடன் அலறியடித்துக் கொண்டு இறங்கினர்.

இதனையடுத்து, தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டு, அவர்கள் விரைந்து வந்து தீயை முழுமையாக அணைத்தனர். அதன் பின்னர், 55 நிமிடங்கள் தாமதமாக பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயில் மீண்டும் புறப்பட்டதாக தெரிகிறது.

இந்த தீ விபத்து குறித்த முதல் கட்ட விசாரணையில் 18 பெட்டிகளை கொண்ட பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயிலின் கடைசி பெட்டிக்கு முந்தைய பெட்டியில் திடீரென பிரேக் பழுதானதாகவும், சிறிது நேரத்தில் அந்த பெட்டியில் இருந்து புகை வெளியேறிய நிலையில் பயணிகள் அச்சம் அடைந்து வெளியேறியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாதுகாப்பு கருதியில் ரயில் நிறுத்தப்பட்ட நிலையில், மற்ற பெட்டிகளில் இருந்த பயணிகள், எதற்காக ரயில் நிற்கிறது என்று தெரியாமல் தவித்தனர். இந்நிலையில், அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வந்து பழுதை சரி செய்த பின், ரயில் மீண்டும் சென்னை நோக்கி புறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்