பிரசாந்த் கிஷோருக்கு சவால்விடும் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்புகள்

Webdunia
திங்கள், 10 பிப்ரவரி 2020 (21:15 IST)
பிரசாந்த் கிஷோருக்கு சவால்விடும் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்புகள்
வரும் 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை சந்திப்பதற்காக திமுக, பிரசாந்த் கிஷோரின் உதவியை நாடி , அவருடைய ஆலோசனையின்படி நடந்து வருகிறது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் பிரசாந்த் கிஷோர் போன்ற எந்த கார்ப்பரேட் நிறுவனத்தின் உதவி இல்லாமலேயே எடப்பாடி பழனிச்சாமி அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு அசத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
குறிப்பாக ஐந்தாம் வகுப்பு, எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு மிகப்பெரிய எதிர்ப்பு வந்ததை அடுத்து அதிரடியாக அந்த தேர்வை ரத்து செய்தார். இதனால் எதிர்க்கட்சிகள் கூட முதல்வருக்கு பாராட்டு தெரிவித்தனர். இந்த நிலையில் மத்திய அரசின் மீத்தேன் திட்டத்திற்கு அதிரடியாக ஆப்பு வைக்கும் வகையில் டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அதிரடி அறிவிப்பை நேற்று அறிவித்தார். இதனால் எடப்பாடி பழனிசாமி மீது தமிழக மக்களுக்கு ஒருவித மரியாதை கிடைத்துவிட்டதாகவே கருதப்படுகிறது.
 
இதனால் பிரசாந்த் கிஷோருக்கு சவால் விடும் வகையில் முதல்வரது அறிவிப்புகள் இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதேபோல் தமிழக அரசின் எந்த ஒரு திட்டத்திற்கும் பொதுமக்களிடமிருந்து எதிர்ப்பு கிளம்பினால் உடனே அந்தத் திட்டத்தை கைவிடும் முடிவுக்கு எடப்பாடி பழனிச்சாமி வந்து விட்டதாக கூறப்படுகிறது
 
குறிப்பாக விரைவில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக அதிமுக அரசு அறிவிப்பு வெளிவந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்றே கூறப்படுகிறது. ஏனெனில் பாஜக கூட்டணியை கிட்டத்தட்ட கைவிடும் நிலைக்கு அதிமுக வந்துவிட்டதாகவும், இதுவரை ஆட்சிக்கு ஆபத்து என்பதால் பாஜக சொல்படி நடந்து வந்ததாகவும், தேர்தல் இன்னும் ஒரு சில மாதங்களே இருப்பதால் இனிமேல் ஆட்சியை கலைக்க பாஜக முன்வராது என்பதால் பாஜகவை எதிர்க்க அதிமுக அரசு துணிந்து விட்டதாகவும் அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்