எடப்பாடி அரசு விரைவில் கவிழும் - மைத்ரேயன் அதிரடி

Webdunia
சனி, 13 மே 2017 (12:07 IST)
தமிழக முதல்வர் எடப்பாடி முதல்வராக நீடிக்கும் நாட்கள் எண்ணப்படுகின்றன என ஓபிஎஸ் அணியில் உள்ள மைத்ரேயன் எம்.பி கருத்து தெரிவித்துள்ளார்.


 

 
சசிகலாவிற்கு எதிராக ஓ.பி.எஸ் அணி களம் இறங்கிய பின், அதிமுகவில் இரு அணிகள் ஏற்பட்டது. இதில், சசிகலாவும், தினகரனும் தற்போது சிறையில் இருக்கிறார்கள்.   
 
இந்நிலையில், ஓ.பி.எஸ் அணியும், எடப்பாடி பழனிச்சாமி அணியும் ஒன்றிணையும் சூழல் சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்டது. இரு அணிகளுக்கும் இடையே பேச்சு வார்த்தை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், முதல்வர் பதவி, பொதுச்செயலாளர் பதவி, ஜெ.வின் மரணம் தொடர்பாக விசாரணை, சசிகலா குடும்பத்தினைரை கட்சியிலிருந்து நீக்குதல் என ஓ.பி.எஸ் அணி கறார் காட்ட, இதுவெல்லாம் முடியாது என எடப்பாடி அணி கை விரித்து விட்டது. எனவே, இரு அணியும் இணைவது சாத்தியமில்லாத சூழலாகவே பார்க்கப்படுகிறது.
 
இந்நிலையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மைத்ரேயன் “தமிழகத்தில் சட்டமும் இல்லை, ஒழுங்குமில்லை. தமிழகத்தில் ஆட்சி என ஒன்று செயல்படுகிறதா என கேள்வி எழுப்பும் நிலை இருக்கிறது. ஏராளமான மர்ம மரணங்கள் நடைபெறுகிறது. ஆனால், காரணங்கள் தெரியவில்லை. சரியான விசாரணை நடைபெறுவதாகவும் தெரியவில்லை.
 
ஒரு பெண் அதிகாரியிடம் ரூ.30 லட்சம் கேட்டு, சுகாதாரத்துறை அமைச்சர் சரோஜா மிரட்டியுள்ளார். அவர் மீது எடப்பாடி அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஜெயலலிதா போல் தலைமை தற்போது இல்லாததால் அனைத்து அமைச்சர்களும் தன்னிச்சையாக செயல்பட்டு கொள்ளையடித்து வருகின்றனர்.
 
எடப்பாடி ஆட்சியின் நாட்கள் எண்ணப்பட்டு வருகிறது. இரட்டை இலை சின்னம் விரைவில் எங்கள் அணிக்கு கிடைக்கும். மக்கள்தான் எங்கள் பலம். அவர்களுக்காகவே நாங்கள் சிந்திக்கிறோம்” என அவர் கூறினார்.
அடுத்த கட்டுரையில்