டி.எஸ்.பி. விஷ்ணுப்ரியாவின் நண்பர் மாளவியா திடீர் கைது

Webdunia
வெள்ளி, 19 ஆகஸ்ட் 2016 (17:10 IST)
கோகுல்ராஜ் கொலை வழக்கில் மரணமடைந்த டி.எஸ்.பி. விஷ்ணுப்ரியாவின் நண்பர் மாளவியா திடீர் கைது செய்யப்பட்டுள்ளார்.
 

 
கடந்த 2014ஆம் ஆண்டு ஜூலை மாதம் சேலம் மாவட்டம், ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் ரயில்வே தண்டவாளத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
 
இந்த வழக்கில்தான், திருச்செங்கோடு டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டு விசாரணை நடத்தி வந்தார். சிலரைக் கைது செய்ததுடன், தொடர்ந்து உண்மையான குற்றவாளிகளைக் கைது செய்ய விசாரணை நடத்தி வந்தார்.
 
இந்நிலையில், கடந்த 2015ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 18ஆம் தேதி திடீரென டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதற்கு கோகுல்ராஜ் கொலை வழக்கில் உயரதிகாரிகள் அவருக்கு அளிக்கப்பட்ட நெருக்கடிதான் காரணம் என்று கூறப்பட்டது.
 
முதலில் தற்கொலை என்று கருதப்பட்ட இந்த வழக்கு, பல்வேறு தரப்பினரின் கோரிக்கைகளுக்குப் பிறகு கொலை வழக்காகப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.
 
கைது செய்யப்பட்ட வழக்கறிஞர் மாளவியா, டிஎஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கில் போலீசார் தேடப்பட்டவர். இந்த வழக்கில் விஷ்ணுபிரியாவின் நண்பர் என்ற முறையில், வழக்கறிஞர் மாளவியாவிடம் சிபிஐசிடி போலீசார் பல முறை விசாரணை செய்தனர்.
 
இதற்கிடையில், வழக்கறிஞர் மாளவியா மீது மதுரை அவனியாபுரம் துணை கண்காணிப்பாளர் சத்யபாமா, இரு சக்கர வாகனத்தில் சென்றபோது வழிமறித்து தாக்கியதாக புகார் செய்தார். இது தொடர்பாக புகார் செய்யப்பட்டு, 3 பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
 
மேலும், போலீஸ் ஜீப் கண்ணாடியை உடைத்ததாக, ஜீப் டிரைவர் புகார் செய்ததன அடிப்படையில் ஒரு வழக்கும், போலீசார் தன்னை மிரட்டுவதாக தற்கொலைக்கு முயன்ற வழக்கும் இவர் மீது உள்ளது குறிப்பிடத்தக்கது.
 
இந்நிலையில், செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ள மாளவியா, ’விஷ்ணுபிரியா தற்கொலைக்கு நான் தான் காரணம் என்று ஒத்துக்கொள்ளச் சொல்லி போலீசார் தன்னை மிரட்டுவதாக’ தெரிவித்துள்ளார்.
அடுத்த கட்டுரையில்