சென்னை அண்ணா நகரில் அதிவேகமாக வந்த கார் சாலை ஓரமாக நின்ற காவலர், தூய்மை பணியாளர்களை மோதி தூக்கி வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று நாடு முழுவதும் தீபாவளி கொண்டாடப்பட்ட நிலையில் பல பகுதிகளிலும் மக்கள் பட்டாசுகள் வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். நேற்று சென்னையில் வெடித்து முடித்த பட்டாசு குப்பைகளை அகற்றும் பணியில் நள்ளிரவு முதலே தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
அவ்வாறாக சென்னை அண்ணா நகரில் தூய்மை பணியாளர்கள் பணி செய்து விட்டு சாலை ஓரமாக அமர்ந்திருந்துள்ளனர். அப்போது அதிவேகமாக வந்த கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து சாலை நடுவே இருந்த தடுப்பு சுவரில் மோதி திரும்பி சாலை ஓரம் அமர்ந்திருந்த தூய்மை பணியாளர்கள் மற்றும் ஒரு காவலரை மோதி தூக்கி வீசியது.
இந்த விபத்தில் 6 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் 2 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது. காரில் இருந்த 3 பேரில் இருவர் தப்பி ஓடிய நிலையில் ஒருவர் பிடிபட்டார். அவர்கள் மதுபோதையில் காரை ஓட்டி வந்ததே விபத்திற்கு காரணம் என தெரியவந்துள்ளது.