மாமா தினகரன் போலீஸ் கஸ்டடியில்: மச்சான் வெங்கடேஷை தலைமை ஏற்க அழைக்கும் அதிமுக?

Webdunia
ஞாயிறு, 30 ஏப்ரல் 2017 (12:43 IST)
சசிகலாவின் அண்ணன் மகன் டாக்டர் வெங்கடேஷை அதிமுகவின் தலைமை பதவிக்கு வாருங்கள் என சென்னையின் சில முக்கிய இடங்களில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. இது அதிமுகவின் எடப்பாடி பழனிச்சாமி அணிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 
 
ஜெயலலிதா இறந்த பின்னர் அதிமுக சசிகலா, ஓபிஎஸ் அணிகளாக இரண்டாக பிரிந்தது. முதல்வர் பதவிக்கு இருவரும் மோதிக்கொள்ள எதிர்பாராத விதமாக சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா தண்டனை பெற்று சிறைக்கு சென்றார்.
 
சசிகலா சிறைக்கு செல்லும் முன்னர் ஜெயலலிதாவால் கட்சியில் இருந்து பல ஆண்டுகளாக நீக்கப்பட்டிருந்த சசிகலாவின் அக்கா மகன் தினகரனையும், அண்ணன் மகன் வெங்கடேஷையும் மீண்டும் கட்சியில் சேர்த்தார்.
 
கட்சியில் சேர்த்த உடனேயே தினகரனுக்கு அதிமுக துணைப் பொதுச்செயலாளர் என்ற புதிய பதவியை உருவாக்கி அவருக்கு அளித்தார். இதனையடுத்து சசிகலா சிறைக்கு செல்ல கட்சி முழுவதையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார் தினகரன்.
 
ஆனால் தற்போது தினகரனும் இரட்டை இலை சின்னத்தை பெற தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர். இந்த நேரம் பார்த்து அவரை அதிமுகவில் இருந்து ஒதுக்கி வைப்பதாகவும் அறிவித்துள்ளனர் அமைச்சர்கள்.
 
ஆனால் இது நாடகம் என ஓபிஎஸ் அணி விமர்சித்து வருகிறது. போலீஸ் கஸ்டடியில் தினகரன் இருப்பதால் அதிமுகவில் தற்போது சசிகலா குடும்பத்தின் ஆதிக்கம் இல்லாமல் இருக்கிறது. இந்நிலையில் அதிமுகவின் தலைமையை ஏற்க வருமாறு சசிகலாவின் அண்ணன் மகன் டாக்டர் வெங்கடேஷுக்கு அழைப்பு விடுத்து சென்னையின் முக்கியமான இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.
 
சசிகலாவின் அண்ணன் சுந்தரவதனனின் மகன் தான் இந்த வெங்கடேஷ். வெங்கடேஷின் சகோதரி அனுராதாவை தான் தினகரன் திருமணம் செய்துள்ளார். தினகரனும், வெங்கடேஷும் மாமா, மச்சான் உறவுமுறை ஆகும்.
அடுத்த கட்டுரையில்