பொதுச்செயலாளரின் அதிகாரங்கள் தலைவருக்கு மாற்றம் – திமுக பொதுக்குழு கூட்டம் இதற்குதானா ?

Webdunia
வெள்ளி, 20 செப்டம்பர் 2019 (09:11 IST)
திமுக பொதுக்குழு அக்டோபர் 6 ஆம் தேதி கூடவுள்ள நிலையில் பொதுச்செயலாளரின் உடல்நிலைக் காரணமாக அவரது பொறுப்புகள் தலைவர் ஸ்டாலினுக்கு மாற்றப்படும் எனத் தெரிகிறது.

திமுக பொதுக்குழு அக்டோபர் மாதம் 6 ஆம் தேதி கூட இருப்பதாக அதன் பொதுச்செயலாளர் க அன்பழகன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் அக்டோபர் 6ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை காலை 10 மணிக்கு திமுக பொதுக் குழுக் கூட்டம் சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ திடலில் உள்ள அரங்கத்தில் நடைபெறும். அதுபோது பொதுக் குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்துகொள்ள வேண்டும்’  எனத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் திடீரென பொதுக்குழு கூட்டப்படுவது எதற்காக என்று திமுக நிர்வாகிகளுக்கே குழப்பம் ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் வழக்கமாக பொதுக்குழு நடக்கும் அண்ணா அறிவாலயத்தில் நடத்தாமல் வேறு இடத்தில் நடத்துவதும் எதற்காக என்று குழப்பம் எழுந்துள்ளது. இதற்குக் காரணமாக திமுக வட்டாரத்தில் ’நீண்ட நாட்களாக திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் உடல்நலக்குறைவால் ஓய்வு எடுத்து வருகிறார். அதனால் அவரது அதிகாரங்களை தலைவருக்கே மாற்றுவதற்காகதான் இந்த பொதுக்குழு கூட்டம்’ எனவும் கிசுகிசுக்கப்படுகிறது.

புதிய பொதுச்செயலாளர் தேர்ந்தெடுக்கப்படும் வரை தலைவர் ஸ்டாலினே பொதுச்செயலாளரின் பொறுப்புகளையும் ஏற்பார் எனத் தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்