ஒரே நாளில் 3 கொலைகள்.. தமிழ்நாடா? கொலைநாடா? பிரேமலதா கண்டனம்..!

Siva
திங்கள், 29 ஜூலை 2024 (09:06 IST)
நேற்று ஒரே நாளில் தமிழகத்தில் மூன்று கொலைகள் நடந்துள்ளதை அடுத்து இது தமிழ்நாடா அல்லது கொலை நாடா என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா கேள்வி எழுப்பி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
நேற்று தமிழகத்தில் பாஜக பிரமுகர் செல்வகுமார், அதிமுக நிர்வாகி பத்மநாபன் மற்றும் காங்கிரஸ் கவுன்சிலர் கணவர் என மூன்று பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த கொலை குறித்த தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா இதனை கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:
 
தருமபுரியில் ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள பிரபல பிரியாணி கடைக்குள் புகுந்த 4 பேர் கொண்ட கும்பல், அங்கிருந்த ஊழியரைச் சரமாரியாக வெட்டிக் கொன்றது. தொடர்ந்து, சிவகங்கை அருகே பாஜக பிரமுகர் செல்வகுமார் நேற்றிரவு மர்ம நபர்களால் வெட்டிக் கொல்லப்பட்டார்.
 
 இன்று அதிகாலை கடலூர் அருகே அதிமுக நிர்வாகி பத்மநாதன் வெட்டிக் கொல்லப்பட்டார். இதைத் தொடர்ந்து, குமரி அருகே காங்கிரஸ் கவுன்சிலரின் கணவர் வெட்டிக் கொல்லப்பட்டார். இதைப் பார்க்கும்போது தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர் கெட்டுப் போய்விட்டது. கொலை செய்வது சர்வ சாதாரணமாகிவிட்டது. 
 
உடனடியாக இது போன்ற படுகொலைகள் தடுக்கப்படும் என்றும், ரவுடிகளுக்கு அவர்கள் மொழியில் சொன்னால் தான் புரியும் என்று காவல்துறை அதிகாரி கூறினார். ஆனால் இன்று வரை எதுவும் தடுக்கப்படவும் இல்லை, ரவுடிகளுக்கு எதுவும் புரிந்ததாகவும் தெரியவில்லை. இன்னும் படுகொலைகள் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது. இதையெல்லாம் பார்க்கும்போது சட்டம் ஒழுங்கு மிகப் பெரிய சீர்கேடாக மாறி இருப்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. 
 
டாஸ்மாக் கஞ்சா போதை வஸ்துக்கள் பயன்பாடு அதிகமாக இருப்பது தான் இதற்கு மிக முக்கிய காரணம். தேமுதிக இதை வன்மையாகக் கண்டிக்கிறது. எனவே தமிழக அரசு இதைக் கவனத்தில் கொண்டு போதை இல்லா தமிழகத்தை உருவாக்கவும், தமிழ்நாடு ஒரு கொலை நாடாக மாறாமல் இருக்க உடனடியாகத் தக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் 
 
இவாறு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்