தமிழகத்தில் நிலவும் அரசியல் குழப்பத்துக்கு பாஜகதான் காரணம் என பரவலாக பலரும் குற்றம் சாட்டுகின்றனர். குறிப்பாக ஆளுநரின் செயல்பாடு பலருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தினகரன் ஆதரவு புகழேந்தி பாஜகவை கடுமையாக சாடியுள்ளார்.
கர்நாடக மாநில அதிமுக செயலாளரும் டிடிவி தினகரனின் தீவிர ஆதரவாளருமான புகழேந்தி மதுரையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்து சபாநாயகர் 18 எம்எல்ஏக்களை பதவி நீக்கம் செய்ததை கண்டித்து பேட்டியளித்தார். அப்போது திமுக ஆட்சிக்கு வருவதற்கு தினகரன் தரப்பு துணை போகிறது என்ற குற்றச்சாட்டு உள்ளது பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்த புகழேந்தி, கடந்த முறை ஓ.பன்னீர்செல்வம் சட்டசபைக்கு வந்தபோது திமுகவினர் கைதட்டி வரவேற்றார்கள். அப்படி என்றால் ஓ.பன்னீர்செல்வம் திமுக ஆதரவாளரா? என கேள்வி எழுப்பினார்.
மேலும் தமிழகத்தில் அதிமுக அல்லது திமுக என திராவிடக் கட்சிகள்தான் ஆட்சிக்கு வர வேண்டும். வேறு எந்த மாமியார், சாமியார்களும் ஆட்சிக்கு வர முடியாது. இனி எக்காலத்திலும் பிஜேபியுடன் எங்களுக்கு ஒட்டும் இல்லை உறவும் இல்லை என கூறினார்.