தீபா டிரைவர் மீது குவியும் புகார்கள் : சிறையிலிருந்து வெளியே வருவாரா?

Webdunia
வியாழன், 18 ஜனவரி 2018 (10:13 IST)
ஜெ.வின் அண்ணன் மகள் தீபாவின் டிரைவர் ராஜா மீது கொலை முயற்சி உள்ளிட்ட பல வழக்குகளை போலீசார் பதிவு செய்ய உள்ளனர் என்ற செய்தி வெளியாகியுள்ளது.

 
எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவையின் தலைவர் தீபா தன்னுடைய வீட்டில் சிலர் கல் வீசி தாக்குதல் நடத்தியதாகவும், தீபா பேரவையிலிருந்து நீக்கப்பட்ட ராமச்சந்திரன் என்பவர் மீது சந்தேகம் இருப்பதாக சில நாட்களுக்கு முன்பு போலீசாரிடம் ஒரு புகார் அளித்தார். ஆனால், போலீசாரின் விசாரணையில் அப்படி எந்த சம்பவமும் நடக்கவில்லை என்பதும், ராமச்சந்திரனை சிக்க வைக்க தீபாவின் கார் ஓட்டுனர் ராஜா அந்த கல்வீச்சு நாடகத்தை அரங்கேற்றியது தெரியவந்தது. 
 
இது தொடர்பான விசாரணையில் தீபா வீட்டின் 3 காவலாளிகளை போலீசார் கைது செய்தனர். எனவே ராஜா தலைமறைவாக இருந்தார். அந்நிலையில், தனது பேரவையின் முக்கிய நிர்வாகியாக இருந்த ராஜாவை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து தீபா நீக்கினார். இந்த நிலையில் நேற்று முன் தினம் திடீரெனா ராஜாவை மாம்பலம் போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.
 
ராஜா கைதான தகவல் அறிந்ததும் தீபா மாம்பலம் காவல்நிலையத்திற்கு சென்று கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது. ஆட்டோ டிரைவர் ஒருவர் ராஜாவின் காரை உரசிவிட்டதாகவும், இதனால் ராஜா, அந்த ஆட்டோ டிரைவராக அடித்ததாகவும் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் ராஜா கைது செய்யப்பட்டதாக போலீசார் தீபாவிடம் விளக்கினர். இருப்பினும் தொடர்ந்து தீபா போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.கட்சியில் இருந்து நீக்கிய ஒருவருக்காக தீபா ஏன் போலீசாருடன் வாக்குவாதம் செய்கிறார் என்பது போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் புரியாத புதிராக இருந்தது.
 
இந்நிலையில், தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராஜா மீது பலர் தொடர்ந்து புகார்கள் கொடுத்து வருகின்றனர். ராஜாவால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக தீபாவின் கணவர் மாதவன் ஒரு புகார் அளித்துள்ளார். அதேபோல், பேரவையில் மாவட்ட செயலர் பதவி வாங்கி தருவதாக கூறி பலரிடம் ராஜா கோடிக்கணக்கில் மோசடி செய்துள்ளதாக ராமச்சந்திரன் புகார் அளித்துள்ளார். 
 
இதனால், ராஜா மீது கொலை முயற்சி உள்ளிட்ட பல வழக்குகள் பாயும் எனத் தெரிகிறது. அடுத்தடுத்த வழக்கில் அவரை போலீசார் கைது செய்வார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்