வங்க கடலில் தோன்றியுள்ள புயல் காரணமாக தமிழகத்தில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதை தொடர்ந்து, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
வங்க கடலில் தோன்றிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு மற்றும் வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து, இரண்டு நாட்களில் புயலாக மாறி தமிழக கடற்கரையை நோக்கி நகரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனை அடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் அவசர ஆய்வு கூட்டம் நடைபெற்று வருகிறது.
பேரிடர் மீட்பு படை, தீயணைப்பு துறை உள்ளிட்டவற்றை தயார் நிலையில் வைத்திருக்க முதல்வர் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. மேலும், டெல்டா மாவட்டத்திற்கு தேசிய பேரிடர் மீட்பு படையினர் சென்றுள்ளதுடன், புயல் கரையை கடக்கும் வரை அவர்கள் அங்கு பாதுகாப்பு பணியில் இருப்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.