தமிழக முதல்வர் ஸ்டாலின் அனைவருக்கும் மூன்று மாதம் இலவசமாக ரீசார்ஜ் வாங்கி தர இருப்பதாகவும், இந்த லிங்கை கிளிக் செய்தால் அந்த ரீசார்ஜ் பெறலாம் என்றும் விளம்பரங்கள் வெளியாகி கொண்டிருக்கும் நிலையில், இது போன்ற விளம்பரங்களை நம்ப வேண்டாம் என்றும், மோசடியான லிங்குகளை கிளிக் செய்ய வேண்டாம் என்றும் சைபர் கிரைம் போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.
ஏற்கனவே பல பிரபலங்களின் பெயர்களையும், பிரபல நிறுவனங்களின் பெயர்களில் போலியாக விளம்பரங்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில், சமீபத்தில் கூட பிரதமர் மோடியின் புகைப்படத்துடன் மோசடி நடந்தது என்பதை பார்த்தோம்.
இந்த நிலையில், புத்தாண்டு ரீசார்ஜ் சலுகை என்ற தலைப்பில் தமிழக முதல்வர் ஸ்டாலின் அனைவருக்கும் இலவசமாக ரீசார்ஜ் செய்து தருவதாக விளம்பரம் செய்யப்பட்டு, அதற்கான லிங்க் இணைக்கப்பட்டுள்ளது. இந்த லிங்கில் நுழைந்தால் மொபைல் என்னுடன் இணைக்கப்பட்ட வங்கி கணக்கில் இருந்து பணம் பறி போக அதிக வாய்ப்பு இருப்பதால், இத்தகைய விளம்பரங்களை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்றும், லிங்குகளை கிளிக் செய்யாமல் கவனமுடன் இருக்க வேண்டும் என்றும் சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், இந்த லிங்கை வெளியிடுபவர்கள் குறித்த தகவலையும் போலீசார் திரட்டி வருவதாகவும் கூறப்படுவது, இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.