வீட்டு வசதி வாரிய முறைகேட்டில் அமைச்சர் பெரியசாமிக்கு நெருக்கடி..! வழக்கை மீண்டும் விசாரிக்க உயர்நீதிமன்றம் தீர்ப்பு..! ..!!

Senthil Velan
திங்கள், 26 பிப்ரவரி 2024 (11:22 IST)
வீட்டு வசதி வாரிய முறைகேடு வழக்கில் இருந்து அமைச்சர் ஐ.பெரியசாமி விடுவிக்கப்பட்டதை ரத்து செய்து மீண்டும் விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உதவிட்டுள்ளது.
 
திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஐ.பெரியசாமி,  தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைச்சரவையில் கூட்டுறவுத்துறை அமைச்சராக செயல்பட்டு வருகிறார். 
 
வழக்கின் பின்னணி:
 
2006 முதல் 2011 வரையிலான ஆண்டு திமுக ஆட்சியின் போது, வீட்டு வசதித்துறை அமைச்சராக ஐ.பெரியசாமி பதவி வகித்தார். கடந்த 2008ஆம் ஆண்டில்  தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி வீட்டு வசதி வாரியத்துக்குச் சொந்தமான வீட்டை மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பாதுகாவலராக இருந்த கணேசன் என்பவருக்கு, ஒதுக்கியதில் முறைகேடு நடந்ததாக புகார் கூறப்பட்டது.
 
இந்த புகார் தொடர்பாக ஐ.பெரியசாமி உள்ளிட்டோர் மீது கடந்த 2012ஆம் ஆண்டு , அதிமுக ஆட்சியின்போது லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலையில், தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி அமைச்சர் ஐ.பெரியசாமி சார்பில் எம்.பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
 
விதிமுறைகளுக்கு உட்பட்டுதான் வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டதாகவும், இதனால் வீட்டு வசதி வாரிய துறைக்கு எந்த ஒரு இழப்பும் ஏற்படவில்லை தெரிவித்து இருந்தார். மேலும் வழக்குத் தொடர்வதற்கு முறையான அனுமதி பெறவில்லை என்றும், புகாருக்கும் அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று வாதிட்டனர்.
 
அத்துடன், அரசியல் உள்நோக்கத்தோடு தொடரப்பட்ட இந்த வழக்கிலிருந்து அவரை விடுவிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர். இதனை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், அமைச்சர் ஐ.பெரியசாமியை வழக்கில் இருந்து விடுவித்து கடந்த ஆண்டு மார்ச் மாதம் தீர்ப்பளித்தது. இந்த உத்தரவை மறு ஆய்வு செய்ய, சென்னை உயநீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தார்.
 
இந்த வழக்கின் இறுதி விசாரணை கடந்த 12ஆம் தேதி நடைபெற்ற போது, வழக்கில் சாட்சி விசாரணை துவங்கிய பின்பு விடுவிக்க கோரியது ஏன்? வழக்குப்பதியும் போது குற்றம் சாட்டப்பட்டவர் என்ன பொறுப்பில் இருந்தார்? என்பன உள்ளிட்ட ஐந்து கேள்விகளை எழுப்பிய நீதிபதி, இதுசம்பந்தமாக விளக்கம் அளிக்குமாறு அறிவுறுத்தினார்.
 
அதற்கு அமைச்சர் ஐ.பெரியசாமி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ரஞ்சித்குமார், முதல் தகவல் அறிக்கையில் ஐ.பெரியசாமியின் பெயர் இல்லை. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தபோதுதான் அவர் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது என்று வாதிட்டார்.
 
ஐ.பெரியசாமிக்கு எதிராக வழக்கு தொடர ஆளுநரிடம் ஒப்புதல் பெறாமல் சபாநாயகரிடம் ஒப்புதல் பெறப்பட்டது, சட்டப்படி தவறு என்பதால்தான் சாட்சி விசாரணை தொடங்கிய பின்னர் விடுவிக்க கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டது. முறையான அனுமதியில்லாமல் தொடரப்பட்ட வழக்கை விசாரிக்க முடியாது என்றும் சபாநாயகரின் ஒப்புதல் சட்டப்படி செல்லாது என்பதால் சிறப்பு நீதிமன்றம் மனதைச் செலுத்தி உத்தரவு பிறப்பித்துள்ளது, அது சரியானது என்றும் வாதிட்டார்.
 
அமைச்சர் ஐ.பெரியசாமி தரப்பு வாதம் முடிந்ததையடுத்து, லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பு தனது தரப்பு வாதத்தை முன் வைத்தது. லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன்,  அரசிடம் சம்பளம் பெறும் பொது ஊழியர் என்பதால் வழக்கு தொடர ஆளுநரிடம் தான் அனுமதி பெற வேண்டும் என்றும் இதுதொடர்பாக உச்சநீதிமன்றமே தீர்ப்பளித்துள்ளது என்றும் வாதிட்டார்.
 
இதனை கேட்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேசன்,  லஞ்ச ஒழிப்புத் துறை ஏன் ஆளுநரிடம் அனுமதி பெற முறையாக முயற்சி செய்யவில்லை என்றும் கேள்வி எழுப்பினார். இந்த விஷயத்தில் இன்னும் காலம் கடந்துவிடவில்லை, இனி மேலும் சென்று ஆளுநருடைய அனுமதியை பெறலாம் என்று என்றும் குறிப்பிட்டார்.
 
ஐ.பெரியசாமி விடுவிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து ஏன் மேல்முறையீடு செய்யவில்லை என்றும் கேள்வி எழுப்பிய நீதிபதி, அமைச்சர் என்பவர் மக்கள் மத்தியில் சுத்தமானவராக இருக்க வேண்டும். அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற நம்பிக்கையை மக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும் என்றும் கருத்து தெரிவித்தார். இந்த வழக்கின் தீர்ப்பை பிப்ரவரி 26ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்.
 
இந்நிலையில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், அமைச்சர் ஐ பெரிய சாமியை விடுவித்து சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார். மேலும் ஊழல் தடுப்பு சட்ட வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் உள்ள இந்த வழக்கின் விசாரணையை மார்ச் 26 ஆம் தேதிக்குள் எம்பி எம்எல்ஏக்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
 
வழக்கு மாற்று நடவடிக்கை முடிந்த பிறகு மார்ச் 28ஆம் தேதி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் எம் பி எம் எல் ஏக்கருக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி ஒரு லட்சம் ரூபாய் காண பிணையை செலுத்த வேண்டும் எனவும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஆஜராக விட்டால் அவர்களுக்கு எதிராக சிறப்பு நீதிமன்றம் பிடிவாரண்டு பிறப்பிக்கலாம் என்றும் நீதிபதி உத்தரவிட்டிருக்கிறார்.

ALSO READ: பாஜகவுடன் அதிமுகவை இணைக்கும் முயற்சி தோல்வி..! இனி தலையிட விரும்பவில்லை - ஜி கே வாசன்..
 
தினந்தோறும் வழக்கின் விசாரணையை நடத்த வேண்டும் என்று சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்ட நீதிபதி ஆனந்த வெங்கடேஷ், வழக்கின் விசாரணையை ஜூலை மாதத்திற்குள் முடித்து உயர் நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் ஆணையிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்