நீட் தேர்வு ரத்து – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல் !

Webdunia
வெள்ளி, 26 ஏப்ரல் 2019 (09:02 IST)
தமிழகத்தில் மே 5 ஆம் தேதி நீட் தேர்வு நடக்கவுள்ள நிலையில் தேர்வை ரத்து செய்ய வேண்டுமென சிபிஎம் கட்சியின் மாநிலச் செயலாளர் கே பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மருத்துவப் படிப்புக்கான நுழைவுத்தேர்வாக நீட் தேர்வை மத்திய அரசு அறிவித்ததை அடுத்து தமிழகத்தில் அதற்கெதிரான போராட்டங்கள் நடக்க ஆரம்பித்தன. தமிழக முதல்வர் ஜெயலலிதா மறைவிற்குப் பின் தமிழக அரசு நீட் தேர்வை தடுக்க தவறியது. இதனால் தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இதில் அரசுப்பள்ளி மாணவர்கள் மற்றும் கிராமப்புற மாணவர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டனர்.

நீட் தேர்வால் பாதிக்கப்பட்ட அணிதா எனும் மாணவி தற்கொலை செய்துகொண்டதை அடுத்து அது மிகப்பெரிய விவாதப் பொருளானது. அதையடுத்து இந்த மக்களவைத் தேர்தல் அறிக்கையில் காங்கிரஸ் நீட் தேர்வை ரத்து செய்வோம் என அறிவித்துள்ளது. ஆனாலும் இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு  மே 5 ஆம் தேதி நடக்க இருக்கிறது.

இதனை முன்னிட்டு மாணவ மாணவிகளுக்குக் கொடுக்கப்பட்டுள்ள ஹால் டிக்கெட்டுகளில் ஏராளமான பிழைகள் உள்ளதாகக் கூறப்படுகிறது. இதனைத் திருத்திக்கொள்ள மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் அலுவலகங்களுக்கு ஓடிக்கொண்டிருக்கின்றனர். இதனால் மாணவர்களுக்கு தேர்வில் முழுக்கவனம் செலுத்த முடியாத சூழல் உருவாகியுள்ளது.

இதையடுத்து நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும்  என சிபிஎம் கட்சியின் மாநிலச் செயலாளர் கே பாலகிருஷ்ணன்  தெரிவித்துள்ளார். அவரது அறிக்கையில் ‘தேர்வுகள் நெருங்கியுள்ள நிலையில் மாணவர்கள் பிழை திருத்தத்துக்காகக் அலைந்து கொண்டிருப்பது அவர்களுக்கு சிரமத்தையைக் கொடுக்கும். இதனால் கடந்த ஆண்டைப் போல இந்த ஆண்டும் தமிழக மாணவர்கள் அதிகளவில் தோல்வி அடைவதற்கான வாய்ப்பு அதிகமாகியுள்ளது.

இந்த குளறுபடிகளை உண்டாக்கி மாணவர்களின் வாழ்க்கையோடு விளையாடும் மத்திய அரசு நிறுத்தி தமிழக மாணவர்களுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். இதற்காக மாணவர்களும், பெற்றோர்களும், அரசியல் கட்சிகளும், பொதுமக்களும், அமைப்புகளும் ஒன்றுபட்டுக் குரலெழுப்ப வேண்டும்’ எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்