ரோட்டில் இறந்து கிடந்த மனைவி – சடலத்தோடு 4 மணி நேரமாக போராடிய கணவர்

Webdunia
செவ்வாய், 25 ஜூன் 2019 (16:20 IST)
கோயம்புத்தூர் பகுதியில் டாக்டர் ஒருவரின் மனைவி விபத்தில் இறந்துவிட அதற்கு காரணமான டாஸ்மாக்கை மூட வலியிறுத்தி நான்கு மணி நேரத்திற்கும் மேலாக அந்த டாக்டர் போராடியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்புத்தூரை சேர்ந்த ரமேஷ் டாக்டர் மட்டுமல்ல, சிறந்த சமூக ஆர்வலரும், இயற்கை ஆர்வலரும் ஆவார். எளிய மக்களுக்கு குறைந்த விலையில் நல்ல மருத்துவத்தை அளித்து வந்த இவருக்கு ஷோபனா என்ற மனைவியும், சாந்தலா என்ற பெண் பிள்ளையும் உள்ளனர். இவரது சாந்தலா 11ம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில் சந்தலாவை பள்ளியிலிருந்து அழைத்து வர ஷோபனா ஸ்கூட்டரில் சென்றுள்ளார். மகளை அழைத்து கொண்டு “ஜம்புகண்டி” பகுதியில் வந்து கொண்டிருந்தபோது, அப்பகுதியில் உள்ள மதுபானக்கடையில் குடித்துவிட்டு வாகனம் ஓட்டி வந்த பாலாஜி என்பவர் அசுர வேகத்தில் வந்து ஷோபனா வண்டி மீது மோதினார். இதில் நிலைதடுமாறி ஸ்கூட்டரோடு சாலையில் தாயும், மகளும் வீசியெறியப்பட்டனர். இதில் ஷோபனா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சாந்தலா உயிருக்கு போராடிக் கொண்டிருந்திருக்கிறார்.

இந்த சம்பவத்தை கேள்விப்பட்டு அதிர்ச்சியடைந்த டாக்டர் ரமேஷ் சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்தார். உயிருக்கு போராடி கொண்டிருந்த மகளை உடனே ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு அனுப்பினார். இறந்துகிடந்த தனது மனைவியை பார்த்து கதறி அழுதவர், அந்த இடத்திலேயே அமர்ந்து போராட ஆரம்பித்தார். தன் குடும்பத்தை இழக்க காரணமான ”ஜம்புகண்டி” பகுதியில் உள்ள மதுக்கடையை மூட சொல்லி ஆர்ப்பாட்டத்தில் இறங்கினார்.

அந்த பகுதியில் உள்ள குடிமகன்கள் நெஞ்சம் சுடும்படி இந்த சம்பவம் இருந்தது. பின்னர் அந்த பகுதிக்கு விரைந்த போலீஸார் இறந்த மனைவியின் உடலை பறிமுதல் செய்ய முயற்சிக்க அதற்கு டாக்டர் மறுப்பு தெரிவித்து தொடர்ந்து போராடியுள்ளார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த கோயம்புத்தூர் தாசில்தார் மதுக்கடையை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதி அளித்தார். காவல் துறையினர் மது அருந்தி வாகனம் ஓட்டிய பாலாஜியின் மீது வழக்கு பதிவு செய்தனர். அதற்கு பிறகே தனது போராட்டத்தை கைவிட்டார்.

தன் குடும்பத்தை இழந்தபோதும் பொது பிரச்சினைக்காக போராடிய அந்த டாக்டரின் சோக நிகழ்வை நினைத்து அந்த பகுதி சில மணி நேரங்கள் துக்கத்தில் ஆழ்ந்தது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்