இன்று மாலை தமிழகத்தில் ஊரடங்கு அறிவிக்க உள்ள நிலையில் சென்னையிலிருந்து பெரும் மக்கள் கூட்டம் சொந்த ஊர்களுக்கு சென்றிருப்பது கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாடு முழுவதும் தீவிரமாக பரவி வரும் கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வர தமிழக அரசு இன்று மாலை 6 மணி முதல் ஊரடங்கை அமல்படுத்துவதாக அறிவித்துள்ளது. ஊரடங்கு செயல்பாட்டில் இருந்தாலும் மளிகை கடைகள், மருந்தகங்கள், உணவகங்கள் இயங்க தடையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட இருப்பதால் தலைநகரமான சென்னையிலிருந்து மக்கள் பலர் அவசர அவசரமாக சொந்த ஊர்களுக்கு கிளம்பியுள்ளனர். இதனால் நேற்று இரவு சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் பெரும் மக்கள் நெரிசலாக காணப்பட்டது. ரயில்கள் செயல்பாட்டில் இல்லாததால் மக்கள் பெரிதும் பேருந்துகளையே நம்பியுள்ளனர்.
நேற்று இரவு மட்டும் சென்னையிலிருந்து 1.5 லட்சம் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றுள்ளனர். சென்னையில் பலருக்கு கொரோனா அபாயம் இருக்கும் சூழலில் இப்படி மக்கள் கூட்டமாக பேருந்து கூரை முதற்கொண்டு ஏறி பயணிப்பது ஆபத்தை உருவாக்கியுள்ளதாக மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். தற்போது சென்னையிலிருந்து கிளம்பி சென்றவர்கள் குறைந்தது ஒருவார காலமாவது தங்களை தனிமைப்படுத்தி கொள்வதே மேலும் கொரோனா பரவாமல் இருக்க ஒரே வழியாகும் என அவர்கள் எச்சரித்துள்ளனர்.