கடற்கரை - தாம்பரம் புறநகர் ரயில் சேவை ரத்து செய்யப்படுவதால், தாம்பரத்தில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு கூடுதலாக 50 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என மாநகர போக்குவரத்து கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கடற்கரை - தாம்பரம் புறநகர் ரயில் சேவை ரத்து செய்யப்படுவது குறித்து மாநகர போக்குவரத்து கழகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
MTC பயணிகள் கவனத்திற்கு!
தாம்பரம் ரயில் நிலையத்தில் 17.11.2024 அன்று காலை 07.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், காலை 07.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து தாம்பரம் செல்லும் ரயில்கள் பல்லாவரம் ரயில் நிலையம் வரை மட்டுமே இயக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
எனவே, 17.11.2024 அன்று அவ்வழித்தடத்தில் பயணம் செய்யும் பயணிகள் நலன் கருதி மா.போ.கழகம் தற்போது இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக தாம்பரத்திலிருந்து பல்லாவரம் பேருந்து நிலையத்திற்கு 10 பேருந்துகள், தி.நகர் பேருந்து நிலையத்திற்கு 20 பேருந்துகள் மற்றும் பிராட்வே பேருந்து நிலையத்திற்கு 20 பேருந்துகள் என மொத்தம் 50 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
மேலும் பயணிகளின் தேவைக்கேற்ப கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும். முக்கிய பேருந்து நிலையங்களில் அலுவலர்களை நியமித்து இப்பேருந்துகள் இயக்கத்தினை கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.