ஆன்லைன் மூலம் பங்கு வர்த்தகம் செய்யலாம் என்று ஆசை வார்த்தை கூறி தொழிலதிபரின் மனைவியிடம் 10 கோடி பறித்த சென்னையை சேர்ந்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை கோட்டூர்புரத்தை சேர்ந்த தொழிலதிபரின் மனைவி ஆன்லைன் வர்த்தக முதலீடு விளம்பரத்தை பார்த்து, தனது முதலீட்டை பல மடங்கு உயர்த்த வேண்டும் என்று திட்டமிட்டார். இதுகுறித்த விளம்பரத்தை நம்பிய அவர், அது குறித்த வாட்ஸ் அப் குழுவில் இணைந்தார். அதன் பின்னர், மோசடியாளர்கள் அனுப்பிய லிங்க் மூலம் முதலீட்டு செயலியை டவுன்லோட் செய்து அதில் முதலீடு செய்தார்.
ஒரு சில நாட்களில் அதிக லாபம் கிடைக்கும் என்று ஆசை வார்த்தையை நம்பி, அவர் வங்கி கணக்கிலிருந்து பல்வேறு நிலைகளில் 10 கோடிக்கும் அதிகமான பணத்தை செலுத்தி முதலீடு செய்தார். அவர் செலுத்திய பணத்திற்கு லாபம் வந்தது போல் செயலியில் காட்டியதால் அவர் சந்தோஷம் அடைந்தார்.
பின்னர் லாப பணத்தை எடுக்க முயன்றபோது தான் ஏமாற்றத்தை உணர்ந்தார். இதையடுத்து, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அவர் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில், சென்னை சேர்ந்த ராஜேஷ் மற்றும் சீனிவாசன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து செல்போன்கள், ஆதார் கார்டுகள், மற்றும் பான் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது."