கோவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்ற இரு அரசு விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய கீதம் புறக்கணிப்பு கண்டிக்கத்தக்கது: மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
கோவையில் நேற்று செவ்வாய்க்கிழமை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்ற இரு அரசு விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய கீதம் ஆகிய இரு பாடல்களும் பாடப்படவில்லை. அன்னை தமிழையும், தேச ஒற்றுமையையும் அவமதிக்கும் வகையிலான தமிழக அரசின் இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது.
தமிழ்நாடு அரசின் பொதுத்துறை சார்பில் கடந்த 17.12.2021-ஆம் நாள் வெளியிடப்பட்ட 1037 என்ற எண் கொண்ட அரசாணையின் 7(இ) பிரிவின்படி, தமிழ்நாட்டில் அமைந்திருக்கும் அனைத்து கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட பொது அமைப்புகளின் நிகழ்ச்சிகளில் நிகழ்வு தொடங்குவதற்கு முன்பு தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் பாடப்பட வேண்டும். ஆனால், தமிழக அரசு பிறப்பித்த ஆணையை முதலமைச்சரே மீறியிருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.
திருப்பூரில் கடந்த 10.02.2019-ஆம் நாள் நடைபெற்ற பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பங்கேற்ற அரசு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படாததை அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் சுட்டிக்காட்டி கண்டித்தார். அதன்பின் கடந்த இரு வாரங்களுக்கு முன் சென்னையில் ஆளுனர் பங்கேற்ற சென்னைத் தொலைக்காட்சி விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்தின் ஒரு வரி விடுபட்டிருந்ததை சுட்டிக்காட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,திராவிடம் என்ற சொல்லை நீக்கி, தமிழ்த்தாய் வாழ்த்தைப் பாடுவது தமிழகத்தின் சட்டத்தை மீறுவதாகும். சட்டப்படி நடக்காமல், இஷ்டப்படி நடப்பவர் அந்தப் பதவி வகிக்கவே தகுதியற்றவர்” என்று ஆளுனரை விமர்சித்திருந்தார். இந்த விமர்சனம் தாம் பங்கேற்ற நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிக்கப்பட்டதை கண்டுகொள்ளாத முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பொருந்துமா? என்பதை அவர் தான் கூற வேண்டும்.
தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிக்கப்படுவதை தமிழ்நாட்டில் உள்ள தமிழுணர்வு மிக்க குடிமக்களால் சகித்துக் கொள்ள முடியாது. கோவையில் செவ்வாய்க்கிழமை தாம் பங்கேற்ற இரு அரசு நிகழ்ச்சிகளிலும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படுவதை உறுதி செய்யாததற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். இனிவரும் காலங்களில் அனைத்து அரசு விழாக்களிலும் தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் தேசிய கீதம் தவறாமல் இசைக்கப்படுவதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி செய்ய வேண்டும்.