திருப்பூர் சேர்ந்த நிதி நிறுவன உரிமையாளர் ஒருவர் தனது வாட்ஸ் அப் கணக்கிற்கு வந்த வங்கி மெசேஜை கிளிக் செய்ததன் மூலம் 7 லட்சம் ரூபாய் இழந்ததாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பூரைச் சேர்ந்த தங்கராஜ் என்பவர் தனியார் நிதி நிறுவனராக இருந்து வரும் நிலையில், அவரது வாட்ஸ் அப்பில் குறுஞ்செய்தி ஒன்று வங்கியில் இருந்து வந்தது. அதில், "உங்களது வங்கி கணக்கு KYC அப்டேட் செய்ய வேண்டும். இன்று அப்டேட் செய்யவில்லை என்றால் வங்கி கணக்கு முடக்கப்படும்" என்று தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.
வங்கியின் லோகோ இருந்ததை அடுத்து, அந்த குறுஞ்செய்தி வங்கியில் இருந்து வந்தது என நம்பிய தங்கராஜ், அதிலுள்ள லிங்கை கிளிக் செய்து KYC அப்டேட் செய்தார். இதனை அடுத்து, சில நிமிடங்களில், அவரது வங்கி கணக்கிலிருந்து 7,00,799 ரூபாய் எடுக்கப்பட்டது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்தார். இது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
பொதுமக்கள் யாரும் வங்கியின் பெயரில் வாட்ஸ் அப் மற்றும் வேறு வகையில் "இன்று கடைசி நாள்" என்று கூறி KYC குறித்த விவரங்களை கேட்டால், லிங்கை கிளிக் செய்ய வேண்டாம் என்றும், வங்கிகள் அவ்வாறு கேட்காது என்றும் போலீசார் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.