தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் தமிழக சுகாதரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் அரசு நிகழ்ச்சி ஒன்றில் ஒருவருக்கொருவர் முகம் கொடுத்து பேசாமல் இருந்தது அதிமுக வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் நேற்று சென்னை அரசு பொது மருத்துவமனையில், காது கேட்காத குழந்தைகளுக்கு காதுகேட்கும் கருவி பொருத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சிறப்பு விருந்தினராக பங்கேற்ற இந்த நிகழ்ச்சிக்கு துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் வந்திருந்தார்.
இந்த நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் மருத்துவம் தொடர்பான விஷயங்களை விளக்கி கூறினார். ஆனால் அதனை முதல்வர் பழனிச்சாமி கேட்டாலும், முகம் கொடுத்து பேசவே இல்லை. நிகழ்ச்சி முடியும் வரை இருவரும் பேசிக்கொள்ளவே இல்லை.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அமைச்சர் விஜயபாஸ்கரை புறக்கணிப்பது இந்த நிகழ்ச்சியின் மூலம் வெளிப்படையாக தெரிந்தது. அதே நேரத்தில் அதிமுகவின் ஜெயா டிவியில் முதல்வர் பழனிச்சாமியின் பெயர் மட்டுமே கூறப்பட்டது. விஜயபாஸ்கரின் பெயர் கூறப்படவில்லை.
சுகாதாரத் துறை அமைச்சரான விஜயபாஸ்கர் வருமான வரித்துறை சோதனையில் சிக்கி அவர் மீது பல்வேறு சர்ச்சைகள் வந்தன. இதனையடுத்து அவரை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் என அந்த நேரத்தில் பல்வேறு தரப்பில் இருந்து அழுத்தம் வந்தன. ஆனால் விஜயபாஸ்கர் தொடர்ந்து அமைச்சரவையில் நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது.