திமுக பிரமுகர் மீது கொடுத்த புகார் மனு மீது நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து - பெட்ரோல் கேனுடன் குடும்பத்தினர் டிஎஸ்பி அலுவலகத்தில் முற்றுகை போராட்டம்!

J.Durai
வியாழன், 19 செப்டம்பர் 2024 (09:37 IST)
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மெய்யணம் பட்டியைச் சேர்ந்தவர்கள் ஜெயக்குமார் - பிரவீனா தம்பதி. அதே ஊரைச் சேர்ந்த உறவினரான கழுவன் என்ற திமுக பிரமுகரின் இடத்தை 10 ஆண்டுக்கு ஒத்திக்கு வாங்கி பேவர் ப்ளாக் நிறுவனம் நடத்தி வந்தாக கூறப்படுகிறது.
 
தற்போது இரண்டு ஆண்டுகளே ஆன சூழலில், இந்த இடத்தை ஒத்தி வாங்கியது தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு முறைகேடாக ஒத்திக்கு பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டு, இது தொடர்பான வழக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளையில், வழக்கு நிலுவையில் உள்ளது.
 
இதனிடையே நீதிமன்றம் உத்தரவிட்டதாக கூறி கடந்த 16ஆம் தேதி சம்பந்தப்பட்ட இடத்தில் இருந்த பேவர் ப்ளாக் கற்களை அகற்றி கொண்டிருந்த போது, அதை தடுத்து திமுக பிரமுகர் கழுவன் மற்றும் அவரது மகன் இந்திரஜித் தாக்கியதாக ஜெயக்குமார் - பிரவீனா தம்பதி 16ஆம் தேதி உசிலம்பட்டி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
 
திமுக பிரமுகர் மீது அளித்த இந்த புகாரின் மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டி இன்று உசிலம்பட்டி டிஎஸ்பி அலுவலகம் முன்பு பெட்ரோல் கேனுடன் ஜெயக்குமார் - பிரவீனா தம்பதியினர் குடும்பத்துடன் திடீர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
 
தகவலறிந்து விரைந்து வந்த உசிலம்பட்டி டிஎஸ்பி செந்தில்குமார், புகார் மீது உரிய நடவடிக்கை எடுப்பதோடு, கற்களை எடுத்து செல்ல பாதுகாப்பு வழங்குவதாக உறுதி அளித்ததை அடுத்து முற்றுகை போராட்டம் கைவிடப்பட்டது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்