’மாயாவதியை சொல்ல நாக்கூசும் வார்த்தைகளால் இழிவுபடுத்தி உள்ளார்’ - திருமாவளவன் எச்சரிக்கை

Webdunia
வியாழன், 21 ஜூலை 2016 (23:32 IST)
பாஜக துணைத் தலைவர் சொல்ல நாக்கூசும் வார்த்தைகளால் இழிவுபடுத்தியுள்ளார். அவரை வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்ய வேண்டுமென்று வலியுறுத்துகிறோம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் கூறியுள்ளார்.
 

 
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “குஜராத் மாநிலத்தில் செத்த மாடு ஒன்றின் தோலை அகற்றியதாகச் சொல்லி பசு பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்தவர்கள் எனக் கூறிக்கொள்ளும் இந்து மதவெறியர்கள், நான்கு தலித்துகளை உணா என்ற இடத்தில் பொதுமக்கள் முன்னிலையில் படுபயங்கரமாகத் தாக்கியுள்ளனர். அதையட்டி குஜராத் மாநிலம் முழுவதும் தலித் மக்கள் கிளர்ந்தெழுந்து போராடி வருகின்றனர்.
 
தலித்துகள் பலர் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொள்ள முயன்றுள்ளனர். அதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிருக்கு ஆபத்தான நிலையில் பலர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.  இதனால் மாநிலம் தழுவிய கடையடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்தப் பிரச்சனை நாடாளுமன்றத்திலும் மாநிலங்களவையிலும் எதிரொலித்து காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துக் கட்சியினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். 
 
குஜராத் தாக்குதலைக் கண்டித்து மாநிலங்களவையில் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் செல்வி மாயாவதி வீரம் செறிந்த போராட்டத்தை நடத்தி வருகிறார். இந்தப் போராட்டங்களின் விளைவாக குஜராத் மாநிலத்தில் தலித்துகளைத் தாக்கியவர்கள் எனச் சிலரைக் கைது செய்தும் பாதிக்கப்பட்ட தலித்துகளுக்கு இழப்பீட்டுத் தொகையை அறிவித்தும் குஜராத் மாநில பாஜக அரசு கண்துடைப்பு நாடகம் ஆடுகிறது.
 
தலித்துகளைத் தாக்கியவர்கள் அனைவரையும் அதேபோன்று பொது இடத்தில் நிறுத்தி தண்டிக்கும்வரை ஓயமாட்டோம் என குஜராத் தலித் மக்கள் தமது போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர். அவர்களுடைய போராட்டத்திற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனது ஆதரவைத் தெரிவித்துக்கொள்கிறது.
 
பசு பாதுகாப்பு என்ற பெயரிலும் வேறு பல பெயர்களிலும் செயல்படும் இந்து மதவெறி அமைப்புகள் அனைத்தையும் தடைசெய்ய வேண்டுமென்றும் அவற்றை பயங்கரவாத அமைப்புகளாக அறிவிக்க வேண்டுமென்றும் மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.
 
குஜராத் தாக்குதலைக் கண்டித்ததற்காக செல்வி மாயாவதி அவர்களை உத்தரப்பிரதேச மாநில பாஜக துணைத் தலைவர் சொல்ல நாக்கூசும் வார்த்தைகளால் இழிவுபடுத்தியுள்ளார். அவரை வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்ய வேண்டுமென்று வலியுறுத்துகிறோம்.
 
குஜராத்தில் மட்டுமின்றி இந்தியா முழுவதும் தலித் மக்கள் மீதான சாதி, மதவெறி தாக்குதல்கள் அதிகரித்தவண்ணம் உள்ளன.  மத்தியில் பாஜக அரசு பொறுப்பேற்றதற்குப் பிறகு சாதிவெறி மதவெறி அமைப்புகள் ஊக்கம் பெற்று இந்தத் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளன. தமிழ்நாட்டில் செங்கத்தில் தலித் குடும்பத்தினரை நடுரோட்டில் மிருகத்தனமாக போலீசார் தாக்கிய கொடுமை நடந்துள்ளது. ஆணவக் கொலைகளும் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன.
 
குஜராத் மாநிலத்தில் தலித்துகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்தும் செல்வி மாயாவதி இழிவுபடுத்தப்பட்டதைக் கண்டித்தும் எனது தலைமையில் எதிர்வரும் 25-7-2016 திங்கள் காலை சென்னையில் மாபெரும் மக்கள்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். இதில் அனைத்து ஜனநாயக சக்திகளும் பெருமளவில் பங்கேற்று நீதிக்கான இப்போராட்டத்திற்கு தமது ஆதரவை நல்க வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறேன்” என கூறியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்