’ஜெயலலிதாவே வாக்குமூலம் அளிக்கிறார்; வேறு வெட்கக்கேடு இல்லை’ - மு.க.ஸ்டாலின்

Webdunia
வியாழன், 21 ஜூலை 2016 (22:48 IST)
2011ல் ஆட்சிக்கு வந்த இதே ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஒரு லட்சத்து 20 ஆயிரம் கோடி ரூபாய் கூடுதல் வருமானத்தை ஐந்து வருடத்தில் உருவாக்குவோம் என்று கூறி, இப்போது 2  லட்சத்து 52 ஆயிரம் கோடி கடன் இருக்கிறது என்று வெளிப்படையாக ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கிறார் என்றால், இதைவிட வெட்கக்கேடு வேறொன்றும் இருக்க முடியாது என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
 

 
2016ஆம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலில் ஆதிமுக ஆட்சி அமைத்து தாக்கல் செய்யும் முதல் பட்ஜெட் தாக்கல் செய்துள்ளது. நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் அவர்கள் 7வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்தார்.
 
இந்நிலையில், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவரும், திமுக பொருளாளருமான மு.க.ஸ்டாலின், 2016-17 ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கை கருத்து தெரிவித்துள்ளார்.
 
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், ”2016-17 –ம் ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கை இன்றைக்கு சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நிதியமைச்சராக இருக்கக்கூடிய ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் இந்த நிதி நிலை அறிக்கையை படிப்பதற்கு முன்பு சுமார் 5 நிமிடம் முதலமைச்சராக இருக்கக் கூடிய ஜெயலலிதா அவர்களை பற்றிய ஒரு மிகப்பெரிய வாழ்த்துப்பா பாடி அந்த நிலையில் நிதி நிலை அறிக்கையை இரண்டு மணி நேரத்திற்கு படித்தார்.
 
சென்ற முறை, அதாவது 2011இல் அதிமுக ஆட்சிக்கு வந்ததும் இதே நிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், தாக்கல் செய்த நிதி நிலை அறிக்கையில் “கிரிமினல்களுக்கு எதிராகவும், சமூக விரோதிகளுக்கு எதிராகவும் கடுமையான நடவடிக்கை எடுத்து அமைதி பூங்காவாக இந்த அரசு நிலைநாட்டும் என்று அறிவித்திருந்தார்.
 
ஆனால், இன்றைக்கு அதிமுக இரண்டாவது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்ற இந்த இரண்டு மாத காலத்திற்குள், காலையில் வெளி வரும் பத்திரிகையாக இருந்தாலும், மாலை வரக்கூடிய பத்திரிகையிலும், ஊடகங்களிலும் என எதில் வரக்கூடிய செய்தியாக இருந்தாலும் சரி, அனைத்திலும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, பாலியல் பலாத்காரம், செயின் பறிப்பு ஆகிய செய்திகள் இல்லாமல் எந்த செய்தியும் வந்திடவில்லை.
 
அதேபோல், மக்களுக்கு நம்பிக்கையளிக்கும் வகையில் காவல்துறை சுதந்திரமாகவும், அச்சமின்றியும் செயல்படும் என்றும் கடந்த நிதி நிலை அறிக்கையில் அறிவித்திருந்தார்கள். ஆனால் இன்றைக்கு “காவல்துறை அதிமுகவின் ஏவல்துறையாக” மாறியிருக்கிறது.
 
இந்த நிதிநிலை அறிக்கையை பற்றி சொல்வதெனில், ஒரு லட்சத்து 20 ஆயிரம் கோடி ரூபாய் கூடுதல் வருமானத்தை ஐந்து வருடத்தில் உருவாக்குவோம் என்று கூறி 2011ல் ஆட்சிக்கு வந்த இதே ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சியை தொடர்ந்து இப்போது இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்தவுடன், 2  லட்சத்து 52 ஆயிரம் கோடி கடன் இருக்கிறது என்று வெளிப்படையாக ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கிறார் என்றால், இதைவிட வெட்கக்கேடு வேறொன்றும் இருக்க முடியாது.
 
இந்த கடனை எப்படி சமாளிக்கப் போகிறார்கள், கடனை சரிகட்ட என்ன செய்ய போகிறார்கள் என்ற தகவல்களும், விளக்கங்களும் இந்த நிதி நிலை அறிக்கையில் இல்லை.
 
ஆகவே, இந்த நிதி நிலை அறிக்கையை பொறுத்தவரையில், ஒரு ”எம்ப்டி” அறிக்கையாக அதாவது ”வெற்று வேட்டு” அறிக்கையாக வெளியிடப்பட்டு இருக்கிறதே தவிர, வேறொன்றுமில்லை” என்றார்.
அடுத்த கட்டுரையில்