திருவள்ளுவர் திமுக தலைவரல்ல! – ஸ்டாலினை சாடிய பாஜக பிரமுகர்!

Webdunia
திங்கள், 4 நவம்பர் 2019 (19:21 IST)
திருவள்ளுவர் விவகாரம் சமீபகாலமாக சூடுபிடித்துள்ள நிலையில் திருவள்ளுவரை திமுக பக்கம் இழுக்க ஸ்டாலின் முயற்சிப்பதாக பாஜக பிரமுகர் கூறியுள்ளது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளுவர் காவி வண்ண உடை அணிந்திருப்பது போல் பாஜக ட்விட்டரில் படம் வெளியிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. பொதுமறை கருத்து பேசிய திருவள்ளுவருக்கு பாஜக காவி சாயம் பூச முயல்வதாக தி.க மற்றும் தி.மு.கவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் ஏற்கனவே திருவள்ளுவர் காவி உடைதான் அணிந்திருந்ததாகவும் திராவிட கழக ஆட்சியில் அந்த அடையாளம் அழிக்கப்பட்டதாகவும் பாஜகவினர் வாதாடினர்.

இதனால் திருவள்ளுவர் குறித்த பிரச்சினை சமூக வலைதளங்களில் வைரலானது. இந்நிலையில் அடையாளம் தெரியாத சில நபர்கள் பிள்ளையார்ப்பட்டியில் உள்ள திருவள்ளுவர் சிலை கண்களில் கருப்பு மை பூசி சேதப்படுத்தினர். இதனால் சமூக வலைதளங்களில் பெரும் கொந்தளிப்பு உருவாகியுள்ளது.

இதுகுறித்து அரசு கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டார். இந்நிலையில் முக ஸ்டாலினுக்கு பதிலளிக்கும் வகையில் ட்விட்டரில் பதிவிட்ட பாஜக தேசிய பொது செயலாளர் முரளிதர ராவ் “திருவள்ளுவர் திமுக தலைவரல்ல. அவர் ஒரு துறவி. எந்த வித பேதமுமற்று மனித வாழ்வுக்கு தேவையான தத்துவத்தை உலகுக்கு சொன்னவர். மு.க.ஸ்டாலின் அவருக்கு திராவிட பிம்பம் ஏற்படுத்த முயற்சிப்பதை கைவிட வேண்டும். கடந்த பல ஆண்டுகளாக திமுக தங்கள் அதிகாரத்தை கொண்டு மக்களை ஏமாற்றி வருகிறது” என்று கூறியுள்ளார்.

இதனால் திருவள்ளுவர் விவகாரம் மாநில அளவிலிருந்து தேசிய அளவில் கவனம் கொள்ளத்தக்க பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. மேலும் திராவிட கட்சியினர் திருவள்ளுவருக்கு காவி சாயம் பூச வேண்டாமென பாஜகவினருக்கு எதிராகவும் பேசி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்