ஜெயலலிதாவை பர்கூரில் தோற்கடித்தது போல் ஆர்.கே.நகரிலும் தோற்கடியுங்கள் என பொது மக்களிடம் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார்.
சென்னைக்கு உட்பட்ட தொகுதிகளில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது ஆர்.கே. நகர் தொகுதியில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
தேர்தலுக்கு மட்டும் வந்து செல்பவர்கள் நாங்கள் அல்ல. எந்த நேரத்திலும் உங்களை தேடி வரக் கூடியவர்கள். நாடி வரக்கூடியவர்கள்.
முதலமைச்சராக உள்ள ஜெயலலிதா தேர்தல் நேரத்தில் மட்டும் வந்து பல பொய் மூட்டைகளை அவிழ்த்து விட்டு விட்டு செல்வார்.
தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியா முழுவதும் உதாரணமாக பார்த்தால், தனது தொகுதிக்கே வராத ஒரு சட்டமன்ற உறுப்பினர் யார் என்றால், அது, இந்த தொகுதியின் சட்ட மன்ற உறுப்பினர் முதல்வர் ஜெயலலிதா மட்டும் தான்.
ஊழல் சாம்ராஜ்யம் நடத்தி வரும் ஜெயலலிதாவிற்கு இந்த தேர்தலில் பாடம் புகட்டுங்கள். ஜெயலலிதாவை பர்கூரில் தோற்கடித்தது போல் ஆர்.கே.நகரிலும் தோற்கடியுங்கள் என்றார்.