தமிழக முதல்வராக அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களால் வி.கே.சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஆளுநருடைய வருகை தாமதமாவதால் சசிகலா முதல்வராக பதவியேற்பதும் தாமதமாகி வருகிறது. இந்நிலையில் சசிகலா முதல்வராக தேர்வானது தமிழ்நாட்டுக்கு மிக மோசமான நாள் என ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா சாடியுள்ளார்.
முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் மறைவையடுத்து தமிழக அரசியலில் பல்வேறு அதிரடி திருப்பங்கள் நடந்து வருகிறது. முதல்வராக இருந்த பன்னீர்செல்வம் ராஜினாமா செய்ததையடுத்து சசிகலா முதல்வராக இருக்கிறார்.
இந்நிலையில் அவர் முதல்வர் ஆவதற்கு தமிழகம் முழுவதும் பலத்த எதிர்ப்பு நிலவி வருகிறது. இதனையடுத்து அதிமுக முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன் இன்று அவரது இல்லத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது அவர் சசிகலா மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்தார்.
இதனையடுத்து அதிமுக முக்கிய நிர்வாகிகள் செய்தியாளர்களை சந்தித்து பி.எச்.பாண்டியனின் குற்றச்சாட்டுகளை மறுத்து பேட்டியளித்தனர். இந்நிலையில் இன்னொரு பக்கம் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா அவரது இல்லத்தில் செய்தியாளர்களை இன்று சந்தித்தார்.
அதில் சசிகலா முதல்வரானது தமிழ்நாட்டுக்கு மிக மோசமான நாள் என சாடினார். தமக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தருகின்றனர். ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24-ஆம் தேதி முக்கியமான அறிவிப்பை வெளியிடுவேன். நான் அரசியலில் இறங்குவது உறுதி. ஜெயலலிதா மரணம் தொடர்பாக அப்பல்லோ மருத்துவர்கள் அளித்த விளக்கம் போதுமானது அல்ல என தீபா கூறினார்.