சுயநலம் பார்க்காமல் பணிக்கு திரும்புங்கள்: அரசு ஊழியர்கள்- ஆசிரியர்களுக்கு பழனிசாமி வேண்டுகோள்

Webdunia
புதன், 30 ஜனவரி 2019 (11:44 IST)
போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்கள் , அரசு ஊழியர்கள் சுயநலம் பார்க்காமல் பணிக்கு திரும்ப வேண்டும் என  முதல்வர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.


 
இது தொடர்பாக நேற்று இரவு அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
 
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கைகளை தமிழக அரசு என்றுமே புறந்தள்ளியதில்லை. அதனால்தான், மத்திய அரசு 7-வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை ஏற்று, மத்திய அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வை வழங்கி ஆணையிட்டவுடன், இந்தியாவிலேயே முதல் மாநிலமாக, தமிழ்நாட்டிலும் ஊதியக் குழுவை அமைத்து, அதன் பரிந்துரையை உரிய காலத்திலேயே பெற்று, ஒரே மாதத்தில் அதனைபரிசீலித்து, மாநில அரசு ஊழியர்களுக்கான ஊதிய உயர்வையும் வழங்கி ஆணையிட்டது.
 
இதனால், ஆண்டுக்கு 14,500 கோடி ரூபாய் கூடுதல் செலவு ஏற்பட்டாலும் அரசு ஊழியர்களின் நலன் கருதி, கடுமையான நிதிச் சுமைக்கு இடையிலும், இந்த அரசு ஊதிய உயர்வை அமல்படுத்தியது. மாநில அரசு மக்களின் நலனுக்காக செயல்பட வேண்டும். இதில், என்னோடு அரசு ஊழியர்களாகிய உங்களுக்கும் முழு பங்கு உண்டு. தமிழ்நாடு தற்போது கடுமையான வறட்சியின் பிடியில் உள்ளது.
 
கடந்த நவம்பர் மாதம் டெல்டா மாவட்டஙளில் ஏற்பட்ட கஜா புயல் ஏற்படுத்திய பாதிப்புகளில் இருந்து மக்கள் இன்னும் மீண்டு வரவில்லை. இந்தநேரத்தில் பிற மாநிலங்களோடு போட்டி போட்டு, தொழில் முதலீடுகளை நாம் பெற்றால்தான், நமது இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்க முடியும். இத்தகைய பொறுப்புகள் பெருஞ்சுமையாக இருக்கும் பொழுது உரிமைகளை பற்றி மட்டும் பேசிக் கொண்டிருப்பது நாம் மேற்கொண்டிருக்கும் மக்கள் பணிகளுக்கு பொருத்தமாக அமையாது.
 
எனவே, அரசு ஊழியர்களும், ஆசிரியப் பெருமக்களும், தங்களுடைய போராட்டங்களை உடனடியாக கைவிட்டு, மக்கள் பணிக்கு திரும்ப வேண்டும். மாநிலம் சந்தித்து வரும் பல்வேறு பிரச்னைகளுக்குத் தீர்வு கண்டு, மக்களின் நலன் பேணும் திட்டங்களையும், வளர்ச்சித் திட்டங்களையும் ஈடுபாட்டோடும், அர்பணிப்பு உணர்வோடு செயல்படுத்த வேண்டும். எனவே அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் நான் அன்போடு கேட்டுக்கொள்வதெல்லாம், போராட்டத்தை உடனடியாக கைவிடுங்கள்.
 
பணிக்குத் திரும்புங்கள். மக்கள் பணியை நாம் அனைவரும் ஒன்றுபட்டு தொய்வின்றி தொடர்ந்து மேற்கொள்வோம். இதனை எனது அன்பான வேண்டுகோளாக கருதி, நாளையே அனைவரும் பணிக்குத் திரும்பக் கேட்டுக் கொள்கிறேன்’  இவ்வாறு கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்