முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாள் பிப்ரவரி 3-ஆம் தேதியான நாளை அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா, திமுக செயல் தலைவர் ஸ்டாலின் ஆகியோர் தங்கள் கட்சியினருடன் சேர்ந்து அஞ்சலி செலுத்த உள்ளனர்.
ஆனால் சென்னை மெரினாவில் 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் போது அவர்கள் நாளை தடையை மீறி செயல்படுவார்களா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
சென்னை மெரினாவில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக திரண்ட கூட்டம் மறுபடியும் ஒன்று சேரக்கூடாது என்பதற்காக பிப்ரவரி 12-ஆம் தேதி வரை மெரினாவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் மெரினாவில் பேரணி, ஆர்ப்பாட்டம், மனித சங்கிலி போன்றவை நடத்த தடை உள்ளது.
இந்நிலையில் அண்ணா நினைவு நாளை அனுசரிக்க மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடத்தில் கட்சியினருடன் ஸ்டாலின் மற்றும் சசிகலா ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்த உள்ளனர். ஆனால் மெரினாவில் 4 பேர் ஒன்றாக கூடவே தடை உள்ளது.
இதனையடுத்து தடையை மீறி நாளை அரசியல் கட்சியினர் அண்ணா நினைவு நாள் அமைதிப் பேரணி நடத்த உள்ளதாக கூறப்படுகிறது. அப்போது காவல்துறை அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்க போகிறது என்பது எதிர்பார்ப்பாக உள்ளது.