சசிகலா-தம்பித்துரை-தினகரன் சந்திப்பை தவிடுபொடியாக்கிய முதல்வர்

Webdunia
புதன், 21 ஜூன் 2017 (22:20 IST)
குடியரசு தலைவர் பாஜக வேட்பாளராக ராம்நாத் கோவிந்த் அறிவிக்கப்பட்டவுடன் முறைப்படி பாஜக மேலிடம் அனைத்து கட்சிகளிடமும் தங்கள் வேட்பாளருக்கு ஆதரவு கேட்டது. அதிமுக ஓபிஎஸ் அணியை பொருத்தவரையில் பாஜக வேட்பாளருக்கு ஆதரவு என்பது உறுதியாகிவிட்ட நிலையில், சசிகலா அணியின் ஆதரவை பெற பாஜக மேலிடம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் பேசியுள்ளது.



 


பாஜக தங்களிடம் தான் ஆதரவு கேட்பார்கள் என்று காத்திருந்த சசிகலா, தினகரனுக்கு இது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எனவே நேற்று சசிகலாவை சந்தித்த தினகரன், அவருடன் ஆலோசனை செய்துவிட்டு பாஜகவுக்கு ஆதரவு இல்லை என்று துணைப்பொதுச்செயலாளர் என்ற முறையில் அறிவிக்கவிருப்பதாக கூறப்பட்டது. இதையே சசிகலா-தம்பித்துரை சந்திப்பும் உறுதி செய்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சற்று முன்னர் திடீரென முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, பாஜக வேட்பாளருக்கு அதிமுக அம்மா அணி ஆதரவு என்று அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் பழனிசாமி, 'பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்புகொண்டு, பா.ஜ.க வேட்பாளருக்கு ஆதரவு தருமாறு கேட்டுக்கொண்டார். இதையடுத்து, எம்எல்ஏ-க்களுடன் கலந்தாலோசித்த பிறகு, பா.ஜ.க.வுக்கு ஆதரவு கொடுக்கலாம் என முடிவெடுக்கப்பட்டுள்ளது' என்று தகவல் தெரிவித்துள்ளார். முதல்வரின் இந்த அறிவிப்பால் தினகரன் கோஷ்டி அதிர்ச்சி அடைந்துள்ளது.
அடுத்த கட்டுரையில்