கார்த்தி பதில் சொல்லவில்லை எனில் இதைத்தான் செய்வேன் - ராதிகா காட்டம்

Webdunia
வியாழன், 1 டிசம்பர் 2016 (19:02 IST)
தன்னுடைய கேள்விகளுக்கு நடிகர் கார்த்தி பதில் சொல்லவில்லை என்றால் மீடியாக்களை அழைத்து, தனது கணவர் சரத்குமார் மீதான குற்றங்களை நிரூபிக்கும் படி கேட்பேன் என நடிகை ராதிகா கருத்து தெரிவித்துள்ளார்.


 

 
முன்னாள் நடிகர் சங்க தலைவர் மற்றும் செயலாளர் ராதாரவி ஆகியோருக்கும், தற்போதுள்ள விஷால் அணிக்கும் பனிப்போர் நடந்து வருவது எல்லோருக்கும் தெரியும்.
 
சரத்குமார் மற்றும் ராதாரவி மீது ஊழல் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதன்பின் நடிகர் சங்க உறுப்பினர் பதவியிலிருந்து அவர்கள் இருவரும் தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டனர். அந்த வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது. இதற்கிடையில் அவர்கள் இருவரையும், நிரந்தரமாக நீக்கம் செய்து சமீபத்தில் நடிகர் சங்கம் அறிவிப்பை வெளியிட்டது.
 
இதையடுத்து, சரத்குமாரின் மனைவியும் நடிகையுமான ராதிகா, தனது டிவிட்டர் பக்கதில் நடிகர் சங்க செயலாளர் கார்த்தியிடம் சில கேள்விகளை எழுப்பினார்.
 
"எப்படி நீங்கள் இடை நீக்கம் செய்யலாம்? இரு தரப்பும் கலந்தாலோசிக்காமல் எடுக்கப்பட்ட முடிவு நீதிமன்ற அவமதிப்பாகும். மேலும், சனிக்கிழமை இடத்தை மாற்றச் சொல்ல எந்த ஆணையருக்கு அனுமதி இருந்தது? அனுமதிச் சான்றை நான் பார்க்க வேண்டும். 21 நாள் நோட்டீஸ் தர வேண்டும். அதை எப்படி மீறினீர்கள்?
 
நான் ஒரு சின்னத்திரை தயாரிப்பாளர். ஒரு பட்டியலிடப்பட்ட நிறுவனத்தை தலைமையேற்று நடத்தி வருகிறேன். ஏன் நிகழ்ச்சி நிரல் தரப்படவில்லை? ஒரு ஆயுட்கால உறுப்பினரான என்னிடம் ஏன் எதையும் தெரிவிக்கவில்லை?" என்று கேள்விகள் எழுப்பினார்.
 
நடிகர் சங்கத்தின் ஆயுட்கால உறுப்பினரான எனக்கு ஆதாரத்தைக் காட்டுங்கள். சங்கத்துக்காக உழைத்தவர்கள் மீது அவதூறான குற்றச்சாட்டுகளை வீசாதீர்கள். நடிகர் விஷாலிடம் முதிர்ச்சி இல்லை. நீங்களும் உங்கள் முட்டாள்தனத்தைக் காட்டாதீர்கள்.  
 
எந்த கணக்கும் ஒப்படைக்கப்படவில்லை என்றீர்கள். உங்களுக்கு அளிக்கப்பட்டது காதல் கடிதங்கள் என நினைத்தீர்களா? தேர்தல் முடிந்தவுடன் சரத்குமார், நாசரிடம் அனைத்து கணக்கு வழக்குகளையும் தாஜ் ஹோட்டலில் சந்தித்து அளித்தார். அதற்கான வீடியோ ஆதாரம் இருக்கிறது. எதற்காவது விளக்கம் கேட்டீர்களா? கேட்டீர்களென்றால் அதை நிரூபியுங்கள்" என்று கூறியிருந்தார்.
 
இதுபற்றி செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த நடிகர் கார்த்தி “ இதுவரை நாங்கள் எந்த ஒரு முடிவு எடுத்தாலும், அதை ஆடிட்டர் மற்றும் வழக்கறிஞர்களின் ஆலோசனைக்குப் பிறகே முடிவு எடுத்திருக்கிறோம். அனைத்து விஷயத்துக்குமே ஆதாரம் இல்லாமல் முடிவு எடுப்பது முட்டாள்தனம் என்பது எனக்கு தெரியும்.  
 
அனைத்துக்குமே சாட்சி இருப்பதால் மட்டுமே பொதுக்குழுவில் முன் வைக்கிறோம். முன்னாள் நிர்வாகிகள் கூறும் குற்றச்சாட்டுகளுக்கு மீடியாவில் பதில் சொல்ல வேண்டும் என்ற அவசியம் எனக்கு கிடையாது. முறையாக கடிதம் அனுப்பிக் கேட்டால் பதில் சொல்ல முடியும்" என்று கூறினார்.
 
இந்நிலையில், இதுபற்றி ராதிகா மீண்டும் கருத்து தெரிவித்த போது “ஒருமுறை நடிகர் சிவகுமாருக்கு எதிராக எனது கணவர் சரத்குமார் கருத்து தெரிவித்தார். அதனால், தனது தந்தை மீது தவறு என்பதை கார்த்திக்கால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எனவே தனிப்பட்ட விரோதம் காரணமாகவே சரத்குமார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
 
இதுபற்றி கார்த்திக்கிடம் பல கேள்விகள் கேட்டேன். ஆனால், அவரிடமிருந்து எந்த பதிலும் இல்லை. பதில் கூறாவிட்டால் மீடியாவை கூட்டி எனது கணவர் சரத் மீதான புகார்களை நிரூபிக்குமாறு அவர்களை கேட்பேன்” என்று கூறியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்