எல்லோரும் பிஸ்கட், குடிநீர், பிரட் ரெடியா வச்சுக்குங்க - தமிழக அரசு அறிவுரை

Webdunia
வியாழன், 1 டிசம்பர் 2016 (17:59 IST)
மழைக்காலம் நெருங்குவதால் பொதுமக்களுக்கு, தமிழக அரசு சில அறிவுரைகளை வழங்கியுள்ளது.


 

 
சென்ற வருடம் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் பெய்த மழையில் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. பலரின் வீடுகளுக்குள் மழை தண்ணீர் மற்றும் ஏரியிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் உணவு மற்றும் தண்ணீர் இல்லாமல் அவதிப்பட்டனர்.
 
இந்நிலையில், தற்போது நாடா புயல் காரணமாக,  தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களான சென்னை, கடலூர், சிதம்பரம் உள்ளிட்ட கடலோர பகுதிகளில், டிசம்பர் 2 மற்றும் 3ம் தேதிகளில், மிக கனமழை பெய்ய வாய்ப்பு அதிகமாக உள்ளது என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.
 
எனவே, இந்த மழைக்காலத்தில் மக்கள் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் சிலவற்றை தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. அவை பின் வருமாறு:
 
புயல் மற்றும் மழை பற்றி வானொலி, தொலைக்காட்சியைத் தொடர்ந்து கவனித்து வானிலை அறிவிப்புகளை தெரிந்துகொள்ள வேண்டும். வானொலி-தொலைக்காட்சியில் பெறப்படும் அதிகாரப்பூர்வமான செய்தியை மட்டுமே பிறருக்குத் தெரிவிப்பது நல்லது. 
 
கடல், கடற்கரை பகுதிகளில் வாழும் மக்கள் மேடான பகுதிக்கு விரைவாக வெளியே வேண்டும். நீர் சூழ்வதற்கு முன்னரே பாதுகாப்பான பகுதிக்குச் செல்வது நல்லது.
 
நீங்கள் குடியிருக்கும் பகுதி வெள்ளம் மற்றும் புயலால் பாதிக்கப்படாது எனில் வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்கவும். எனினும், அதிகாரப்பூர்வமாக கேட்டுக் கொள்ளப்பட்டால் உடன் வெளியேறவும்.
 
நீர்நிலைகள், ஆற்றுக் கரைகளிலுள்ள குடியிருப்புகளுக்குள் கனமழை காரணமாக நீர் சூழ வாய்ப்புள்ளதால் கரையோரங்களில் குடியிருப்போர் கவனமாக இருக்க வேண்டும். சமைக்காமல் உடனடியாக உண்ணக்கூடிய உணவுகளான பிரட், பிஸ்கட், பழங்கள் ஆகியவற்றை தேவையான அளவு இருப்பு வைக்க வேண்டும். போதுமான குடிநீரை பாதுகாப்பான பாத்திரங்களில் சேமித்து வைக்கவும்.
 
மழை நீர் சூழ்வதால் வெளியேற வேண்டிய பகுதியில் நீங்கள் குடியிருந்தால், பொருட்சேதங்களை தவிர்ப்பதற்காக விலை உயர்ந்த பொருள்களை வீட்டில் உயரமான பகுதியில் வைத்து பாதுகாக்க வேண்டும். குழந்தைகள், சிறப்பு உணவு தேவைப்படும் முதியோருக்குத் தேவையான உணவுப் பொருள்களை இருப்பு வைப்பது முக்கியம். 
 
அதேபோல், மழைநீரில் செல்லும்போது, கையில் குச்சியை வைத்துக் கொள்ள வேண்டும். பாம்பு, பூச்சிகள் கடிக்க வாய்ப்புள்ளதால் கவனம் தேவை. 
 
மழை மற்றும் காற்றின் காரணமாக, மின் ஒயர்கள் அறுந்து கிடக்க வாய்ப்புள்ளதால் தெருக்களில் கவனமாக நடக்க வேண்டும். அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் வரை புயல் பாதுகாப்பு மையங்களில் இருந்து வீட்டுக்குத் திரும்பிச் செல்ல வேண்டாம். மின்கம்பங்களில் இருந்து தளர்வான, அறுந்த மின் கம்பிகளை கவனமாகத் தவிர்க்கவும்.
 
பேரிடரால் பாதுகாப்புக்கு உள்ளான பகுதிக்கு தேவையில்லாமல் வேடிக்கை பார்க்கச் செல்லக் கூடாது.
 
என்று பொதுமக்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்