அவகாசம் கொடுங்கள் : இணையதள விமர்சகர்களுக்கு நடிகர் விவேக் வேண்டுகோள்

Webdunia
செவ்வாய், 25 அக்டோபர் 2016 (18:13 IST)
ஒரு படம் நன்றாக இருக்கிறது என்பதை ரசிகர்கள் பார்த்து தீர்மானிக்க வேண்டும். அதற்கு அவகாசம் கொடுங்கள் என்று இணையதளத்தில் சினிமாவை விமர்சிப்பவர்களுக்கு நடிகர் விவேக் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


 

 
நடிகர் கார்த்தி மற்றும் நயன்தாரா நடித்துள்ள காஷ்மோரா படம் தொடர்பான பத்திரிக்கையாளர் சந்திப்பு சமீபத்தில் சென்னையில் நடந்தது. இதில் கலந்து கொண்டு நடிகர் விவேக் பேசியதாவது:
 
முன்பெல்லாம் ஒரு படம் வெளியாகி 4 தியேட்டர்களில் 100 நாட்கள் ஓடியது. ஆனால் தற்போது 1000 தியேட்டர்களில் ஒரு படம் வெளியாகி 3 நாட்கள் ஓடுகிறது. அதற்கு காரணம் சிலரின் அச்சுறுத்தல்கள். 
 
மேலும், இன்று படம் பார்த்துக் கொண்டிருக்கும் போதே, படம் சரியில்லை.. போர்...என்று செல்போனில் கருத்து பதிவிடுகின்றனர். இது தவறானது. முன்பெல்லாம் பத்திரிக்கையாளர்கள்தான் ஊடகவியலாளர்களாக இருந்தார்கள். அதன் பின் தொலைக்காட்சி வந்தது. இன்று கையில் ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் ஒவ்வொருவரும் ஒரு மீடியாக்காரராக மாறிவிட்டனர். பத்திரிக்கையாளர்களுக்கு இருக்கும் பொறுப்பு, ஸ்மார்ட்போன் வைத்திருப்பவர்களுக்கு இருக்க வாய்ப்பில்லை.
 
பாதி படம் பார்த்து விட்டு, படம் நன்றாக இல்லை என்று கூறி விடுகிறார்கள். பல கோடி ரூபாய் முதலீடு மற்றும் பல குடும்பங்களின் வாழ்வாதரங்கள் இதனால் பாதிக்கிறது. எனவே மனதில் வைத்துக் கொண்டு கருத்து சொல்ல வேண்டும்.
 
படம் நன்றாக இருக்கிறதா என்பதை மக்கள் பார்த்து முடிவு செய்யட்டும். அதற்கான கால அவகாசத்தை கொடுங்கள்.. அதற்கு முன்பே தவறான கருத்துகளை மக்களின் மனதில் விதைப்பது தவறு. இதை நான் ஒரு வேண்டுகோளாக கேட்டுக் கொள்கிறேன்” என்று பேசினார்.

 
அடுத்த கட்டுரையில்